தமிழ்நாட்டில் கொரோனா 4ம் அலை வருவதை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தற்போது சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளில் கொரோனா நான்காவது அலை தீவிரமாக பரவி வருகிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட 740 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் தினசரி இறப்பு 59 பேர் என உள்ளது. எனவே எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டும். இதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு 100 க்கும் குறைவாக உள்ளது என்று கூறிய அமைச்சர், கொரோனா இறப்பு பூஜ்ஜியம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இதனையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அவர் திறந்து வைத்தார். மேலும் சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாமையும் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிட்டார். அப்பகுதியில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை பார்வையிட்டார்.







