கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது.
டெல்லியில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், குறைந்தபட்ச ஆதார விலை 375 ரூபாய் அதிகரிக்கப்பட்டு குவின்டால் ஒன்றுக்கு 10,335 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன்மூலம் 12 கடலோர மாநிலங்களைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்ற அவர், ஆதார விலையை உயத்தியதால் சந்தையிலும் வருவாய் உயரும் என்று கூறினார்.
உடைக்கப்பட்ட மற்றும் கொப்பரை தேங்காய் என இரண்டின் ஆதார விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டுக்கும் சேர்த்து உற்பத்திச் செலவாக 6,800 ரூபாய் உள்ளது. நாங்கள் அதைவிட முறையே 52 மற்றும் 55 சதவிகிதம் அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்துள்ளதாக கூறினார். இது சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரை என்று தெரிவித்ததோடு, அதனை முன்பு இருந்த காங்கிரஸ் அரசாங்கம் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.







