பிரச்சனைகளுக்கு இணையாக வாய்ப்புகளும் உள்ளன- டாடா குழும தலைவர்

இந்தியாவில் பிரச்சனைகளுக்கு இணையாக வாய்ப்புகளும் இருப்பதாகவும், இளைஞர்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார். .சென்னை ஐ.ஐ.டி.யின் 59-வது பட்டமளிப்பு விழா, இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நேரடி முறையில்…

இந்தியாவில் பிரச்சனைகளுக்கு இணையாக வாய்ப்புகளும் இருப்பதாகவும், இளைஞர்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

.சென்னை ஐ.ஐ.டி.யின் 59-வது பட்டமளிப்பு விழா, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்
நேரடி முறையில் இன்று, கிண்டியில் உள்ள வளாகத்தில் நடைபெற்றது. இதில் டாடா குழும தலைவர், என்.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பதக்கங்கள், பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

2,084 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிய பின் மேடையில் பேசிய என்.சந்திரசேகரன்,
உலகளவில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனமாக சென்னை ஐ.ஐ.டி., இருப்பதாகக் கூறினார்.  கடந்த இரண்டாண்டுகளில் கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் என்று யாரும் எதிர்பாராத விஷயங்கள் நடந்துள்ள நிலையில், அடுத்த 20 ஆண்டுகளில் சுகாதாரத்துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Artificial Intelligence, Data Science போன்ற தொழில்நுட்பங்கள் இல்லாமல்
எதிர்காலத்தில் தொழில் வளர்ச்சி உட்பட எந்த வளர்ச்சியும் சாத்தியமில்லை
என்று கூறிய டாடா குழும தலைவர் சந்திரசேகரன்,  Health Care, Biology, Health Technology ஆகிய துறைகள் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்றார். மூளையைப் பற்றிய ஆராய்ச்சி அதிகளவில் நடைபெற்று வயது மூப்பு
தொடர்பான பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு, மனிதனின் வயதைக் குறைப்பதற்கான
சிகிச்சைகளும் வருங்காலத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக சந்திரசேகரன் கூறினார்.

வேலைவாய்ப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு , தண்ணீர் பிரச்சனை,
தரமான கல்வி, தரமான சுகாதாரம் கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு
பிரச்சனைகள் இந்தியாவில் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்த டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன்,  இருப்பினும் பிரச்சனைகளுக்கு இணையாக பல்வேறு வாய்ப்புகள் நம் நாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.  இந்திய நிறுவனங்களுக்கு உலகளவில் பெரும் மதிப்பு உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் அத்தகைய வாய்ப்புகளை வருங்கால தலைமுறையினர் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, ஐ.ஐ.டி.,
ஆட்சிமன்றக்குழு தலைவர் பவன் கோயங்கா, பதிவாளர், பேராசிரியர்கள் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.