குஜராத்தில் பலத்த மழை காரணமாக 14 பேர் பலியாகினர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 31,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கட்ச், நவ்சாரி, டாங் ஆகிய மாவட்டங்களில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 51 மாநில நெடுஞ்சாலைகள், 400க்கும் அதிகமான கிராமப்புற சாலைகளும் மழை காரணமாக சேதமடைந்தன என்று மாநில பேரிடர் மேலாண்மை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், “பலத்த மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 9 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலியாகினர். முதலமைச்சர் பூபேந்திர படேல், மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எனவே, கூடிய விரைவில் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும். 31,035 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். 21,094 பேர் தற்காலிக முகாம்களில் உள்ளனர். 9,941 பேர் வீடு திரும்பினர் என்றார் திரிவேதி.
இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை ஜுனகத், கிர், சோம்நாத், டங், அம்ரேலி ஆகிய பகுதிகளில் 47 மில்லி மீட்டர் மற்றும் 88 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாநில அவசர செயல்பாட்டு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. செளராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யவுள்ளது.
முன்னதாக, முதலமைச்சர் பூபேந்திர படேல் செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டரில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்தார். பல்வேறு நீர்ப் பிடிப்பு பகுதிகளில் நீர் அளவு அதிகரித்தது. சர்தார் சரோவர் அணை மொத்த கொள்ளவில் 48 சதவீதம் நிரம்பியது.