கம்யூனிஸ்டுகள் ஆற்றியிருக்கும் மகத்தான பங்களிப்பை வரலாற்றில் இருந்து யாராலும் அழித்து விட முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 1947 ஆம் ஆண்டு செயுள் வடிவில் வஊசி எழுதியிருந்த ‘தன் வரலாறு புத்தகம்’ உரைநடை வடிவமாக மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கே.பாலகிருஷ்ணன், இந்திய சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு போராடியவர் வஊசி எனவும், அதற்காக தனது சொத்துகளை அவர் இழந்தார் எனவும் கூறினார். ஆங்கிலேயர்களின் வியாபாரத்தில் ஆணி அடிக்க வேண்டும் என்பதால், தனது சொத்துக்களை விற்று கப்பலை வாங்கி ஓட்டினார். மேலும் தலை சிறந்த எழுத்தாளர், தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவர் என புகழாரம் சூட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சுதந்திர தின பேரணியின் போது பேரணி வாகனத்தில் வஉசி-யின் புகைப்படம் இடம்பெற மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. வஉசி-யை போன்று விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னுக்கு நிறுத்துவதை மத்திய அரசு விரும்பவில்லை என குற்றம்சாட்டினார். வஉசி காலத்தில் நடைபெற்ற விடுதலை போராட்ட வரலாறுகளை தமிழ்நாடு பாட நூல்களில் சேர்த்து, வஉசி-யின் விடுதலை போராட்ட வரலாறை குழந்தைகள் தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

நட்சத்திரம் நகர்கிறது படத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தான் அந்த படத்தை பார்க்கவில்லை என்றும் பார்த்த பின்பு தான் கருத்து சொல்ல முடியும் என்றும் கூறினார். கம்யூனிஸ்டுகள் சாதி ஒழிப்பிற்கு எதுவும் செய்யவில்லை என ஒரு திரைப்படத்தில் சொல்வதால், கம்யூனிஸ்டுகள் ஆற்றியிருக்கும் மகத்தான பங்களிப்பை வரலாற்றில் இருந்து யாராலும் அழித்து விட முடியாது என தெரிவித்தார்.
அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள சமத்துவம் மற்றும் மதசார்பற்ற என்கிற வார்த்தைகளை நீக்க சுப்பிரமணிய சாமி தொடர்ந்துள்ள வழக்கு குறித்த கேள்விக்கு, அம்பேத்கர் எழுதியிருக்கும் அரசியல் சாசன சட்டத்தை ஒட்டுமொத்தமாக அகற்றிவிட்டு மனுதர்மத்தை அரசியல் சாசனமாக வைத்திருப்பவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பு. அந்த ஆர்எஸ்எஸ் உடன் சுப்பிரமணிய சாமி இரண்டற கலந்துவிட்டது என்பது தான் இதிலிருந்து தெரிகிறது என கே.பாலகிருஷ்ணன் பதிலளித்தார்.
-இரா.நம்பிராஜன்







