வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த பயணத்தின்போது இந்தியா வங்கதேசம் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவின் அண்டைநாடுகளில் ஒன்றான வங்கதேசத்தின் பிரதமர் ஷேக்ஹசீனா கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு இந்தியா வந்தார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் டெல்லி வந்துள்ளார்.
4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனாவிற்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேச உள்ளார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, நீர்மேலாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், மின்சாரம், எரிசக்தி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கதேச பிரதமரின் இந்த பயணத்தின்போது, அந்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் இடையே, நதிநீர் பங்கீடு, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டத்துறைகளில் 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. வங்கதேசம் தனது இலக்குகளை அடைவதற்கு, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள இந்த பயணம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என தங்கள் நாடு நம்புவதாக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமன் கூறினார்.







