ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பெரும்பான்மையை நிரூபித்து ஹேமந்த் சோரன் தனது முதலமைச்சர் பதவியை தக்க வைத்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையால் அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்யுமாறு பாஜக-வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஆளுநருக்கு அந்த குற்றச்சாட்டை பரிந்துரை செய்தது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் அந்த பரிந்துரையின் மீது ஆளுநர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.
இதனால் ஆளும் ஜார்கண்ட் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. வலைவிரித்துள்ளதாக தகவல் பரவியது. இதனையடுத்து ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் சத்தீஸ்கர் மாநிலம் கொண்டு செல்லப்பட்டு சொகுசு விடுதிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதால் ஜார்கண்ட் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி நீடித்து வந்தது.
இந்த நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் சட்டசபையில் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தானே முடிவெடுத்தார். அதன்படி இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தார். திட்டமிட்டப்படி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், ஹேமந்த் சோரன் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி வாகை சூடினார்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் ஹேமந்த் சோரன், எதிர்க்கட்சி ஜனநாயகத்தை அழித்துவிட்டது என்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினார். ஆனால் அவர்கள் திட்டத்தை முறியடித்து விட்டு எங்கள் பலத்தை காட்டிவிட்டோம் என தெரிவித்தார்.
ஜார்கண்ட் சட்டசபையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 30 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 18 எம்.எல்.ஏ.க்களும், ராஷ்டிரீய ஜனதாதளத்துக்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். அதேநேரம் எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கு 26 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். இதில், இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் 48 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








