வரலாற்று ரீதியாக இந்து மத உணர்வுகளை தூண்டிவிட்டு கடந்த 30 ஆண்டுகளாக பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதில், பாஜக வெற்றியும் பெறுகிறது. அதனால் தான் இந்திய அளவில் இரண்டாவது முறையாக பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடிகிறது. தமிழ்நாட்டிலும் அதே ஃபார்முலாவை பயன்படுத்துவதாக அரசியல் விமர்சகர்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஸ்டாலின் ஆட்சியில் தான் ஆய்வு நடக்கிறதா?
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் விவகாரத்தில் நடக்கும் சர்ச்சையானது பல 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. சைவ, வைணவ, சமண, பௌத்த கோயில்களுக்கு என்று பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும் சொத்துக்களும் தமிழ்நாட்டில் இருக்கின்றன. வைணவம், சமணம், பௌத்த சமயங்களோடு ஒப்பிடுகையில், சைவ தலங்களுக்கான நிலங்கள் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. இவற்றை நிர்வகிப்பதில் குறிப்பிட்ட சில சாதிகளின் ஆதிக்கமும் செல்வாக்கும் அதிகம் இருக்கிறது. கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில், இந்த கோயில் நிலங்களை நிர்வகிப்பதில் ஊழல் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த இடத்தில் தான், மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, கோயில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது. அதனை, தனிப்பட்ட நபர்கள் யாரும் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, 8,292 கோயில்கள் அரசாங்கத்தின் நேரடி நிர்வாக கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஊழல் புரிந்த தர்மகர்த்தாக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மூடிக்கிடந்த கோயில்கள் வழிபாட்டுக்குத் திறந்துவிடப்பட்டன.
ஓமந்தூரார் சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்த 1947-49 வரையிலான இரண்டு ஆண்டுகால ஆட்சியிலும் கோயில்களில் நடந்த ஊழல்கள், முறைகேடுகளை வெளியுலகிற்கு காட்டினார். இதற்காக, கோயில் நிலங்களை குத்தகைக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்தினார். அதே போல, மடங்களில் உள்ள நகைகள் குறித்த விவரங்களை பதிவேற்றில் பதிந்து அரசுக்கு சமர்பிக்க வேண்டும் என்றும் ஓமந்தூரார் அறிவித்தார். அதை நடைமுறையும் படுத்தினார். இந்து சமய மற்றும் தர்ம ஸ்தாபன பரிபாலன வாரியம் என்ற பெயரில் இருந்த அமைப்பை மாற்றி, அதை ஓர் அரசாங்கத் துறையாக ஓமந்தூரார் மாற்றி கட்டமைத்தார். இந்து கோயில்கள் மட்டுமன்றி, சமணர்களுடைய கோயில்களையும் அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்ததால் மத விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது எனக் கடும் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும், அதனைப் பொருட்படுத்தாத ஓமந்தூரார் கோயில்களின் வரவு செலவு கணக்குகள், நகை விவரங்கள் மற்றும் குத்தகை விடப்படும் விவரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு அடுத்தடுத்த ஆட்சி காலத்தில், இந்து சமய அறநிலையத்துறை அரசு நிர்வகித்ததோடு கோயில் சொத்துக்கள், நகைகள் தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வந்தன. ஆனால், கடந்த அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் இந்த ஆய்வுகள் முறையாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேற்கூறிய குற்றச்சாட்டுகளை திமுக அரசு பொறுப்பேற்றப் பிறகு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் புகாராக வந்ததை அவரே செய்தியாளர்களை சந்தித்துக் கூறினார்.
ஆக, முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தான் இந்த கோயில் வரவு செலவு கணக்குகளை சமர்பிக்க வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இல்லை. அதற்கு முன்பு இருந்த நடைமுறை இடைப்பட்ட காலத்தில் நின்றுவிட்டதால் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டிய இடத்தில் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
சிதம்பரம் கோயிலும் சர்ச்சைகளும்:
சிதம்பரம் நடராஜர் கோயிக்கும் சர்ச்சைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதைத் தான் கடந்த கால வரலாறு கூறுகிறது.
தேவாரம், திருவாசகம் ஏடுகளை பூட்டி வைத்துக் கொண்டு அதை தர தீட்சிதர்கள் மறுத்தார்கள் என்ற சர்ச்சையும் உள்ளது. கோயிலுக்குள் நுழைய நந்தனாருக்கு தடை, ஆறுமுகசாமியை தேவாரம் பாடவிடாமல் தடை என தடைகள் தொடருகின்றன. அந்த வகையில், தற்போது, அதிகாரிகளுக்கு நடராஜர் கோயில் வரவு செலவு கணக்குகளைத் தரவும் தீட்சிதர்கள் தடை விதித்துள்ளார். இதே போல், திருமுறை பாடவும் தடை விதித்தார்கள் இந்த தீட்சிதர்கள். பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தீட்சிதர்கள் அனுமதியுடன் திருமுறை ஓத ஆரம்பிக்கப்பட்டது 2014 ஆம் ஆண்டு. நாள்தோறும் திருமுறைகள் ஓதப்பட்ட நிலையில், 3 ஆண்டுகளிலேயே அதை முடக்கினார்கள் தீட்சிதர்கள். காரணம், திருமுறை பாடுவதற்கு, தீட்சிதர்கள் தினமும் 5 ஆயிரம் கேட்டதாகவும் அதனைத் தர மறுத்ததால் அன்றிலிருந்து இன்று வரை நடராஜர் கோயிலில் திருமுறைகள் பாடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் சைவ கோயில்கள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் லிங்கத்தை மட்டுமே வைத்து வழிபடும் முறைகள் உள்ளன. ஆனால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டும் தான் தில்லை நடராஜர் ஆனந்த நடனமாடும் காட்சிகள் பக்தர்களுக்கு காண்பிக்கப்படும். இதனை, கனகசபை மண்டபத்தில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வது சிதம்பரத்தில் நடைமுறையாக இருந்தது. இந்த நடைமுறைக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, கனகசபை மண்டபத்தின் மீது ஏறி சிதம்பரம் நடராஜரை தரிசிக்கும் உரிமையை பக்தர்களுக்கு பெற்றுத் தந்தார். கனக சபை மீது ஏறி பொதுமக்கள் வழிபடலாம் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கு தொடக்கத்தில், தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு, தீட்சதர்கள் ஒத்துழைப்பு அளித்ததால், கனகசபை மீது ஏறி பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
இந்து விரோத கட்சி திமுக, இந்து மக்களை திமுக வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் திமுக அரசு மீது தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகளால் குறிப்பாக பாஜக, அதிமுகவால் முன்வைக்கப்படுகிறது. தன்னை திராவிடர் கழகத்தின் நீட்சியாக திமுக காட்டிக்கொள்வதும் திமுக மீது இத்தகைய விமர்சனங்கள் கூர் தீட்டப்படுவதற்காக அமைந்தன.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்ற பிரச்சாரம் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஆவடியில் பசு மடம் கட்டுதல், ஆம்பூர் பிரியாணி திருவிழா நிறுத்தி வைப்பு விவகாரம், கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்துதல் என திமுக அரசு காட்டிய தீவிரம் அதிகம். அதனுடன், வட பழனி முருகன் கோயில் குட முழக்கு, திருவாரூர் தேரோட்டம் உள்ளிட்டவற்றை மீண்டும் செய்து காட்டியதாலும், சடங்குகள் செய்வது, குட முழக்கு செய்வதிலும் தீவிரம் காட்டியதால் இந்து மக்களுக்கான அரசாக திமுக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சி செய்தது. மனுநீதி, மனுதர்மம் என்றெல்லாம் இந்துக்களின் கருத்தியலில் நின்று அமைச்சர் சேகர்பாபு பேசினார். கோயில் புனரமைப்பு, கும்பாபிஷேகம் போன்றவற்றை சாதனைகளாக காட்டி, இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை என்றும் வெளிப்படையாகவே பேசினார். இதில், ஒருபடி மேலே சென்று, திராவிட ஆட்சி என்பது சைவத்தை உள்ளடக்கியது தான் என்று பட்டவர்த்தனமாகவே அறிவித்தார்.
திமுக ஒரு இந்து விரோத கட்சி என சில அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், திமுகவை ஒரு இந்து விரோத கட்சி என்று கட்டமைப்பதற்காகவே, ஆம்பூர் பிரியாணி சர்ச்சை, தருமபுர ஆதீனம் பல்லக்கு விவகாரம், கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு என நீண்டு தற்போது சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் விவகாரம் வந்து நிற்கிறது.
சட்டத்தின் படி நடக்கும் திமுக:
இந்த இடத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவின் கருத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீக்ஷிதர்களுக்கு சொந்தமானது. அவர்கள் அனுமதியுடனேயே பொதுமக்கள் வழிபாடு நடத்துகின்றனர் என்று உச்சநீதிமன்றம் 2014 தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. இந்து கோவில்கள் சுரண்டி அழிக்கும் நவீன திப்புசுல்தான்கள் சட்டத்தை மீறி அடாவடியில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார். ஆனால், சட்டத்தில் குறிப்பிட்ட படையே திமுக அரசு நடந்து கொள்வதாக அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுக்கோவில்களில் ஆய்வு நடத்த அறநிலையத்துறைக்கு உரிமை உள்ளது. புகார் வரும் பட்சத்தில் இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959 பிரிவு 23, 28ன் படி நாங்கள் ஆய்வு செய்ய முடியும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளன.
மக்களுக்கு ஆன்ம நிம்மதியை அளிக்கும் இடமாக இருக்கும் கோயில்களில் சர்ச்சைகள் தொடர்வது பக்தர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. எனவே, கோயில் வரவு செலவு கணக்குகளை அதிகாரிகளிடம் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் காண்பித்து பிரச்னைக்கு முடிவு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.








