சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்தது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, சென்னை கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எக்மோர், திரு.வி.க.நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான கோயம்பேடு, மதுரவாயல், வானகரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலையில் ஆங்காங்கே மழை நீர், குளம் போல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறி செல்கின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து அதிகாலை 4.55 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய விமானமும், காலை 6.15 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய விமானம், பகல்1.10 மணிக்கு கர்னூல் விமானம், மாலை 5.10 மணிக்கு மதுரை விமானம் ஆகிய 4 விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதுப்போல் அதிகாலை மும்பையில் இருந்து வர வேண்டிய விமானம், காலை 9.30 மணிக்கு மதுரையில் இருந்து வர வேண்டிய விமானம், மாலை 4.20 மணிக்கு கர்னூலில் இருந்து வர வேண்டிய விமானம், இரவு 8:30 மணிக்கு மதுரையில் வர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து பிராங்க்பார்ட், இலங்கை, பாரீஸ், தோகா, சார்ஜா, துபாய், அந்தமான் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. மழை காரணமாக விமான சேவை மாற்றி அமைக்கப்பட்டதால் தாமதம், ரத்து பற்றிய தகவல்கள் முன்னதாகவே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதால் பாதிப்பு எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.







