ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 22,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூா், குடகு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி அணையின் மொத்த கொள்ளளவான 84 அடியில், தற்போது 83 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழ்நாடு – காவிரி எல்லையான, ஒகேனக்கல்,பிலிக்குண்டு பகுதியில் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு 4000 கன அடியாக இருந்த நீர்வரத்து, அடுத்த சில
நாட்களில் படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து அதிரடியாக உயர்ந்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீரானது, தமிழ்நாடு எல்லையை கடந்த 16ம் தேதி மதியம் வந்தடைந்தது.
இதையும் படியுங்கள் : “நீ சிரிக்கும் போது நான் சிரிக்கிறேன்!” – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து நெகிழ்ச்சியுடன் விடை பெற்ற கவுதம் கம்பீர்!
இந்நிலையில், நேற்று மாலை வினாடிக்கு 22,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 32,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில், சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.








