திருச்சி கிழக்கில் போட்டி…? – நடிகர் ராகவா லாரன்ஸ் பரபரப்பு ட்வீட்…!

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்த வதந்திகள் தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் 10 ஆம் தேதி பதவியேற்றார். தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் அதில் ஒரு ஒரு தொகுதியான திருச்சி கிழக்கை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆறு மாதததிற்குள் அத்தொகுதிக்கு தேர்தலும் நடத்தபட உள்ளது.

இந்த சூழலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளார் என தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில் நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் வெளீயிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், “அனைவருக்கும் வணக்கம், திருச்சி கிழக்குத் தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடவிருப்பதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இதுகுறித்த தெளிவான தகவலை அறிய ஊடக நண்பர்கள் பலர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு சந்திக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த ஊகங்கள் ஒரு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுகுறித்து நான் விளக்கமளிக்க வேண்டும் என்று கருதி இந்தத் தகவலைப் பகிர்கிறேன்.

தற்போது நான் ‘பென்ஸ்’ (Benz) திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளேன்; இப்பணிகள் வரும் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன.

என் தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கிய முடிவை வரும் 11-ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிக்கவுள்ளேன். #மாற்றம் #சேவையே_கடவுள்” என்று தெரிவித்துள்ளார்.

ஜூன் 11 ஆம் தேதி லாரன்ஸ் வெளியிட போகிற முடிவு என்ன… ? திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக அறிவிக்க உள்ளாரா…? என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.