திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ் நாடு அரசின் அறிவிப்பிற்கு சிபிஎம் வரவேற்பு…!

திருப்பரங்குன்றம் தொடர்பான தமிழ் நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மதுரை திரப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது. ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக அப்போது தீபம் ஏற்றப்பட வில்லை. இதற்கு பாஜக, இந்து முன்னணி மற்றும் பல இந்து அமைப்புகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தன. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு முந்தையை நிலையே கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொடர்பான தமிழ் நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

மதவாத சக்திகளின் நிர்ப்பந்தத்துக்கு‌ இடம் கொடுக்காமல் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் குறித்து உறுதியான நிலையை அரசு தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.