இந்த வார ரிலீஸ்: ‘பரிமளா அண்ட் கோ’, ‘பெத்தி’, ‘சன்னிதானம் பி.ஓ’, ‘சம்ஹாரம்’ – மினி ரிவியூ ஒரே பார்வையில்!

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மினி விமர்சனத்தை இந்த தொகுப்பில் காண்போம்.

கோலிவுட்டில் இந்த வாரம் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடித்த ‘பரிமளா அண்ட் கோ’, ராம்சரண், ஜான்விகபூர் நடிப்பில் ‘பெத்தி’, யோகிபாபு நடித்த ‘சன்னிதானம் பி.ஓ’ மற்றும் பிரஜின் நடித்த ‘சம்ஹாரம்’ ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ உங்களுக்காக….!

பரிமளா அண்ட் கோ

ஜெயராம், ஊர்வசி தம்பதியினருக்கு சஞ்சனா, அவந்திகா என இரு மகள்கள். அந்த ஏரியா ரவுடி கம் போதை மருந்து வியாபாரியான சாண்டிமாஸ்டர் இவர்களுக்கு டார்ச்சர் கொடுக்கிறார். ஜெயராம் இளையமகளை வலுகட்டாயமாக காதலிக்கிறார். சாண்டியை கொல்வது என ஒட்டுமொத்த குடும்பமும் முடிவு செய்கிறது. ஒரு நாள் இரவில் சாண்டி கொல்லப்பட, இன்ஸ்பெக்டர் மிஷ்கின் அந்த கொலை வழக்கை விசாரிக்கிறார். ஜெயராம் குடும்பத்தில் சாண்டியை கொன்றது யார்? கொலையாளியை மிஷ்கின் கண்டுபிடித்தாரா? சாண்டி கொலைக்கு அந்த குடும்பம் மட்டுமே காரணமா? இப்படி செல்கிறது பரிமளா அண்ட் கோ கதை.

வழக்கமாக குடும்ப கதையை காமெடி கலந்து எடுக்கும் பாண்டியராஜ், இதில் ஒரு குடும்பத்தின் கதையை திரில்லர் கலந்த காமெடி பாணியில் சொல்லியிருக்கிறார்.

பரிமளா என்ற குடும்பதலைவர் கேரக்டரில் ஜெயராம் நடிப்பு அருமை. குடும்ப பிரச்னைகளை அவர் கையாளும் விதம், மகள், மனைவியுடன் சண்டை, பேச்சுவார்த்தை, கொலை பழி விழுந்தவுடன் தத்தளிப்பது, போலீசை சமாளிப்பது, ஹவுஸ்ஓனர் யோகிபாபுவுடன் பிரச்னை என பல இடங்களில் தனது தேர்ந்த நடிப்பை தந்து இருக்கிறார். அவர் மனைவியாக வரும் ஊர்வசியும் கொலை விசாரணை, பயம், மகள், கணவருடன் விவாதம் என பல இடங்களில் நடிப்பால் மிரட்டியிருக்கிறார். ஜெயராம், ஊர்வசி வரும் இடங்கள் படத்தை கலகலப்பாக்குகிறது. இவர்களின் மூத்தமகளாக வரும் சஞ்சனா நடிப்பு அவ்வளவு பிரஷ். இளைய மகள் அவந்திகா கொஞ்சம் அப்பாவி. நம் குடும்பங்களில் பார்ப்பவர்கள் மாதிரி இவர்கள் இருவரும் இயல்பான நடிப்பை தந்து இருக்கிறாரகள்.

வில்லத்தனம் கலந்த காதலனாக வருகிறார் சாண்டி. இன்ஸ்பெக்டராக வரும் மிஷ்கின் நடிப்பை கொஞ்சம் ரப்பாக தெரிந்தாலும், அதில் காமெடியும் ஒளிந்து இருக்கிறது. யோகிபாபு அவ்வப்போது வந்து தன் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார். ஆனாலும் அவருக்கான காமெடியை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம். சில இடங்களில் பேசிக்கொண்டே இருப்பதும், சில இடங்களில் காமெடி சரிவர ரசிகர்களிடம் போய் சேராமல் இருப்பதும் படத்தின் மைனஸ்.

திரில்லர், குடும்ப பிரச்னை, காமெடி, சஸ்பென்ஸ் கலந்து கதை நகர்கிறது. பிற்பாதியில் கொஞ்சம் தொய்வு. குறிப்பாக, பாடல்கள், கிளைமாக்சில் கவனம் செலுத்திஇருக்கலாம். திரைக்கதையில், காமெடி காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் படம் பெரிய ஹிட்டாகி இருக்கும். ஆனாலும், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம். குறிப்பாக, போதை மருந்து எதிரான கரு இயக்குனரின் சமூக அக்கறையை காண்பிக்கிறது

பெத்தி

புச்சிபாபுசனா இயக்கத்தில் ராம்சரண், சிவராஜ்குமார், ஜெகபதிபாபு, ஜான்விகபூர் நடித்த தெலுங்கு படமான பெத்தி தமிழிலும் டப்பிங் ஆகி வெளிவந்துள்ளது. மலைவாசியாக இருக்கும் ராம்சரண் தனது கிராமத்துக்கு அரசு அங்கீகாரமும், தங்கள் ஏரியாவுக்கு ஒரு ரயில்வேஸ்டேஷனும் வர போராடுகிறார். அதற்காக கிரிக்கெட் விளையாடுகிறார், குஸ்தி சண்டைபோடுகிறார், பாரா ஆசியன் விளையாட்டிலும் வெற்றி பெறுகிறார். அவர் கனவு நிறைவேறியதா என்பது பெத்தி கிளைமாக்ஸ். ராம்சரண் கேரக்டர் பெயர் பெத்தி.

ஒரு சர்க்கரை ஆலையில் வேலை செய்யும் ராம்சரணை, அவர் ஏரியா ஆட்களை விஜயநகரவாசிகள் அடிமை மாதிரி நடத்துகிறார்கள். அதேசமயம், கிரிக்கெட் விளையாட்டில் ராம்சரண் அந்த ஏரியாவில் பெரிய ஸ்டார் ஆக இருக்கிறார். அதிலும் அவரை அவமானப்படுத்த, சிவராஜ்குமார் உதவியுடன் குஸ்தி போட்டியில் வெல்கிறார். அப்போதும் அவர் கோரிக்கைகளை டில்லி அரசு நிராகரிக்க, ஒரு முடிவெடுக்கிறார். அது என்ன என்ற ரீதியில் கதை செல்கிறது.

ராம்சரண் நடிப்பு, கதைக்காக அவர் மாறும் உடல்அமைப்பு, உழைப்பு அசர வைக்கிறது. அவர் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம். பல விருதுகள் கிடைக்கும். கிரிக்கெட், குஸ்தி, பாரா ஆசியன் போட்டி என மூன்றிலும் கவனம் செலுத்தி, அந்த வீரராகவே மாறியிருப்பது சபாஷ். கிளைமாக்சில் அவர் செய்யும் விஷயங்கள் உருக்கம். மாஸ் ஹீரோவாக இருந்தாலும் இப்பட்ட சமூக அக்கறை கதையில் கவனம் செலுத்தியிருப்பது கவனிக்க வைக்கிறது. ஆனால், காதல் காட்சிகள் சுமார். ஹீரோயினாக வரும் ஜான்விகபூர் நடிப்பு, அவர் டான்ஸ் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு பாடலுக்கு ஸ்ருதிஹாசனும் குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.

குஸ்தி வாத்தியாராக வரும் சிவராஜ் குமார், விளையாட்டு அதிகாரியாக வரும் பொமன் இரானி, தங்கள் பகுதிக்கு ரயில் வர போராடி உயிர் நீக்கும் ஊர் பெரியவர் ஜெகபதிபாபு ஆகியோர் மனதில் நிற்கிறார்கள். ஆனால், படத்தின் நீளம் சோதிக்க வைக்கிறது. 20, 30 ஆண்டுகளுக்குமுன்பு கதை நடக்கிறது. அது சம்பந்தப்பட்ட ஆர்ட் வொர்க், ஏ.ஆர்.ரகுமான் பாடல், பின்னணி இசை பிளஸ். டில்லி சம்பந்தப்பட்ட அரசியல்காட்சிகளில் அவ்வளவு செயற்கைதனம், இன்னும் நீளத்தை குறைத்து, எமோஷன், விளையாட்டு விஷயங்களில் கவனம் செலுத்தி இ ருந்தால் தங்கல், பைசன் மாதிரி வந்து இருக்கும். ஆனாலும் கிராமங்களின் இன்னொரு பக்கம், மலைவாழ் மக்களின் வாழ்க்கை, இந்திய விளையாட்டுதுறை, அதிகாரிகளின் மனநிலை ஆகியவற்றை சொன்னதில் இயக்குனர் நிற்கிறார். ராம்சரண் ரசிகர்களுக்கும், விளையாட்டு பிரியர்களுக்கு பெத்தி பிடிக்கும்.

சன்னிதானம் பி.ஓ

சபரிமலை சன்னிதானம் போஸ்ட் ஆபீசில் அருகில் தனது சிறுவயது மகனை (யோகிபாபு) தொலைக்கிறார் சித்தாரா. பல ஆண்டுகளாக மகனை தேடி வருகிறார். பிற்காலத்தில் சமையல்காரனாக மாறும் யோகிபாபுவும் தனது தாயை தேடி வருகிறார். இருவரும் பல ஆண்டுகளுக்குபின் சேர்ந்தார்களா? என்பதை சபரிமலை, அய்யப்பபக்தி பின்னணியில் அம்மா சென்டிமென்ட் கலந்து சொல்லும் படம் சன்னிதானம் பி.ஓ. இப்படத்தை அமுதா பாரதி இயக்கி இருக்கிறார்.

யோகிபாபுதான் கதையின் நாயகன், அவர் சமையல் வேலை காட்சிகள், சில சீன்களில் ஆங்காங்கே ஒன்லைன் காமெடி இருக்கிறது. அதை இன்னும் அதிகரித்து இருக்கலாம். அம்மாவுக்கும், மகனுக்குமான பாசம்தான் கதை. கடைசியில் சில சீன்களில் மட்டுமே சித்தாராவும், யோகிபாபுவும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். அந்த இடங்கள் ஓகே. அதிலும் இன்னும் சிறப்பாக நடித்து இருக்கலாம். அம்மா பாசத்தை அழுத்தமாக சொல்லியிருக்கலாம். யோகிபாபுக்கு காதல் இல்லை. ஜோடி இல்லை. ஆனால், அண்ணன் தம்பிபாசம், ஐயப்ப பக்தி இருக்கிறது. ஏறி வந்தோம் ஐயப்பா என்ற அவரின் பாடல் ரசிக்க வைக்கிறது. மூணாறு ரமேஷ், யோகிபாபு சம்பந்தப்பட்ட சீன்கள் உருக்கம்.

அம்மாவாக வரும் சித்தாராதான் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். மகனை தொலைப்பது, தேடுவது, அவரின் பிளாஷ்பேக் காட்சிகள், கிளைமாக்ஸ் என எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். வாய் பேச முடியாதவராக அவர் வருகிறார். போலீசாக வரும் கஜராஜ், சமையல்காரராக வரும் மூணாறுரமேஷ் ஆகியோரும் மனதில் நிற்கிறார். ரூபேஷ், வந்தஷா என காதல் ஜோடி கதையும் படத்தில் வருகிறது. அவர்கள்
சம்பந்தப்பட்ட சீன்கள் ஆறுதல்.

சபரிமலை ஐயப்பன் பின்னணியில், சன்னிதானம் போஸ்ட் ஆபீஸ் சுற்றி நடக்கும் கதை என்றாலும், சபரிமலை காட்சிகள் குறைவு, ஐயப்பபக்தியும் குறைவு. இரண்டையும் இன்னும் சிறப்பாக செய்திருந்தாலும் படத்தின் மீது ஒரு ஈர்ப்பு வந்துஇருக்கும். அதேபோல் மலையாள படங்கள் பாணியில் திரைக்கதையும், காட்சிகளும் மெதுவாக நகர்கிறது. கிளைமாக்ஸ், அதற்கு முந்தைய காட்சியில் கூட விறுவிறுப்பு குறைவு. ஆனாலும், அம்மா பாசம், அண்ணன், த ம்பிபாசம், ஐயப்பன் மகிமை ஆகியவை படத்துக்கு பிளஸ் ஆக இருக்கிறது. படத்தில் பல இடங்களில் பாசிட்டிவிட்டி பேசுப்படுகிறது.

சம்ஹாரம்

மறுநாள் காலையில் எப்படியாவது தனது தங்கைக்கு திருமணம் நடத்தியே தீர வேண்டும் என்று துடிக்கிறார் அண்ணன் பிரஜின். ஆனால், தங்கை ஷர்மிஷாவுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. காரணம், மாப்பிள்ளை கணேஷ் கேரக்டர். முதல்நாள் இரவில் தன் வீட்டுக்கு காதலனை அழைக்கிறார், தப்பி செல்ல திட்டமிடுகிறார். அப்போது மாப்பிள்ளை கணேசும் அந்த வீட்டில் தங்குகிறார். இதற்கிடையே, சூழ்நிலை காரணமாக ஒரு அப்பா , மகளும் அதே வீட்டில் தங்குகிறார்கள். இரவில் ஒருவரை ஒருவர் கொல்ல திட்டமிடுகிறார்கள். இடையில் வீட்டு வாட்ச்மேனும் தன் பங்கிற்கு மிரட்டுகிறார். முகமூடி அணிந்த ஒருவனும் கொலை செய்ய துடிக்கிறார். திருமணத்துக்கு முதல்நாள் பிரஜின் பங்களாவில் நடப்பது என்ன? யார் கொல்லப்படுகிறார்கள். அவர்களை கொன்றது யார்? ஏன் என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ராம்பிரபா இயக்கிய சம்ஹாரம் படம்.

அண்ணன், தங்கை பாசத்தை திரில்லர் பாணியில் கொடுத்து இருக்கிறார் இயக்குனர். பல படங்களில் சாப்டாக நடித்த பிரஜின் இதில் கொஞ்சம் கோபக்காரராக, வில்லத்தனம் கலந்தவராக வருகிறார். அவரின் கெட்அப், நடு இரவில் அந்த வீட்டில் அவர் நடந்துகொள்ளும் விதம், தீட்டுகிற திட்டங்கள் ரசிக்க வைக்கிறது. கிளைமாக்சில் அவர் கேரக்டர் மீது பரிவு வருகிறது. தங்கையாக வரும் ஷர்மிஷாவுக்கு நல்ல நடிப்பு. அண்ணன், காதலன், கொலையாளிகளுக்கு நடுவே அவர் தவிக்கிற இடங்கள் நச். வில்லனாக வரும் கணேஷ் ஓரளவு நடித்து இருக்கிறார். பிரஜின் மனைவியாக வந்து பாசத்தை பொழிகிறார் நியா. கதையில் நிறைய கேரக்டர்கள் வருகின்றன. இடைவேளைக்குபின் அவர்களின் பின்னணி காண்பிக்கப்படுகிறது. ஆந்தைகண்ணனாக வரும் அந்த வாட்ச்மேன் கேரக்டரும் சுவாரஸ்யம். முதற்பாதியை விட பிற்பாதியில் கதை வேகம் எடுக்கிறது.

ஒரே இரவில் கதை நடப்பதும், ஒரு வீட்டில் கதை நடப்பதும் சவாலான விஷயம். அதை சிறப்பாக செய்து இருக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவாளர் சுரேஷ்சுந்தரம் வொர்க்கும் கவனிக்க வைக்கிறது. புதுமுகங்கள் நடித்து இருப்பது கொஞ்சம் மைனஸ் ஆக இருக்கிறது. காதல், வில்லன் பின்னணி, சண்டைகாட்சிகள் செயற்கை ஆக இருக்கிறது. அந்த இரவில் ஒவ்வொரு அறையிலும் நடக்கும் விஷயங்கள், கொலை, அதற்கான பின்னணி ஆகியவை சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.