2024 மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடுவது என்பது தொண்டர்கள் கையில்தான் உள்ளது என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் மதிமுக சார்பில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் திரையிடும் விழா தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆவணப்பட வெளியீட்டு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மதிமுக,திமுக,காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “வைகோ தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆற்றிய பணியை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தான் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில் எந்த ஒரு கட்சியையோ இயக்கத்தையோ மனதை புண்படுத்தாமல் தான் தயாரிக்கப்பட்டுள்ளது இதனால் கூட்டணிக்குள் எந்த விதமான குழப்பமும் இருக்காது” என்று தெரிவித்தார்.
ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்ற ரீதியில் தான் பாஜக செயல்பட்டு வருகிறது என்ற அவர், அதன் தொடர்ச்சியாக தான் தற்போது ஒரே மொழி இந்தி மொழி என்ற கருத்தை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.உலகம் முழுவதும் ஆங்கில மொழி இணைப்பு மொழியாக இருக்கும் போது இந்தியாவில் மட்டும் ஆங்கிலம் வேண்டாம் இந்தி வேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் எனக் கேள்வி எழுப்பினார். அதிமுகவை பிளவுபடுத்த பாஜக முயற்சி செய்கிறது இதனை புரிந்து கொண்டு அதிமுக நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோளும் விடுத்தார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் துறை வைகோவை பார்க்கலாமா என்ற கேள்விக்கு, “இது நான் எடுக்க வேண்டிய முடிவு அல்ல. நிர்வாகிகளும் தொண்டர்களும் எடுக்க வேண்டிய முடிவு” என்று பதிலளித்தார்.







