காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வதை விட, இந்த காலத்தில் பரந்த மனதில்லை என்று சொல்லி விடலாம் போல. காதலிக்க மறுத்த பெண்ணை ரயில் தள்ளிவிட்டு கொன்ற கொடூரம், ஆசிட் வீச்சு, பின்தொடர்ந்து துன்புறுத்தல், பிடிக்கவில்லை என்று கூறியவரின் உயிரை எடுத்தல் என்பதெல்லாம் தொடர்கதையாகவே இருக்கிறது. இதற்கு தீர்வு என்ன? காதலில் நிராகரிப்பை எப்படித் தாங்கிக் கொள்வது? நிராகரிப்பை இளம் தலைமுறையால் தாங்கிக் கொள்ள முடியாதது ஏன்? அவர்களுக்கான வழிகாட்டுதல்கள்? என்ன என்பதைப் பற்றியும், மன நல ஆலோசகர்களின் விளக்கங்கள் குறித்தும் பார்ப்போம்.
இன்னொரு காதல் இல்லையா?
காதல் வயப்படுதல் பற்றி இளைஞர் ஒருவரிடம் பேசியபோது, பெண்ணின் பெயரைக் கேட்ட உடனே அவரைப் பிடித்து விட்டதாகவும், அதனால் அவரைப் பின் தொடர்ந்து காதலித்ததாகவும் கூறினார். ஆனால் அந்த பெண் காதலை நிராகரித்து விட்டவுடன், தமது தவறை உணர்ந்து திருந்தி விட்டதாகவும், அந்த பெண்ணை மறந்துவிட்டதாகவும் கூறினார். பெயரைக் கேட்டாலே காதல் வருமா என்றால் வரும் என்பதற்கு அவர் தான் சாட்சி. அதே போல் கண்டதும் காதல், காணாமல் காதல், பேசாமல் காதல், ஒருதலைக் காதல் என காதலின் வகைகள் எண்ணற்றவை. ஆனால் அதைப்பற்றி எல்லாம் நாம் ஆராயப் போவதில்லை.
அண்மைச் செய்தி – காதலை நிராகரிப்பது குற்றமா? கண்ணீர் தான் மிச்சமா? 
இந்த கட்டுரையில் காதலித்தவர்கள், நேசிக்கப்பட்டவர்கள் தங்கள் அன்பை, காதலை நிராகரித்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றித் தான் விவரமாக பேச உள்ளோம். கமல்ஹாசன் நடிப்பில் வசூல் சாதனை படைத்த வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் வரும் கவிஞர் வைரமுத்துவின்
“காதல் போயின் சாதலா?
இன்னொரு காதல் இல்லையா?
ஒரே காதல் ஊரில் இல்லையடா?”
என்ற ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் அறிவுரையைப் போலவே இளைஞர்களும், இளம்பெண்களும் மனமாற்றத்திற்கு தயாராக வேண்டிய தருணத்தில் இருக்கிறார்கள். அத்துடன் எதையும் எதிர்கொண்டு துணிச்சலுடன் வாழக்கூடிய மனநிலைக்கு உருவாக வேண்டும். ஏனெனில் “காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல்” என்று மகாகவி பாரதி எழுதியது இன்றைய வாழ்க்கைக்கு பொருந்தி வரக்கூடியது அல்ல. அவர், மனித வாழ்வைக் குறித்தும், அதை எழுதவில்லை என்பதையும் குயில் பாட்டில் அன்பின் அதீதத்தை உணர்த்தவும் எழுதினார் என்பதை உணர்தல் அவசியம். 
வாழ்வின் அர்த்தத்தை உணர வேண்டும்
காதலில் அன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் ஒரு கட்டத்தில் பிரிய நேரிட்டால், அந்த பிரிவை எப்படி எதிர்கொள்வது? அதற்கான வழிகாட்டுதல் என்ன என்று மனநல ஆலோசகர் வந்தனா அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவரும் “காதலே காதலே என்னை என்ன செய்யப் போகிறாய்” என்று பாடுவதெல்லாம் வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்காது என்றும், வாழ்வின் அந்த நொடியைப் புரிந்து, எதிர்கால இலக்கை அறிந்து வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார். அப்படி என்றால் ஏன் காதலிக்கிறோம் என்று ஆராய்தலும் அவசியம். அன்பை, உணர்வை, மகிழ்வை, துயரத்தை பகிர்ந்து கொள்ளவே.
காதல் புறக்கணிப்பை கையாளும் வழிமுறை
அன்பின் அடிப்படையில் உருவாகும் காதலில் நிராகரிப்பை ஒருவராலும் தாங்கிக் கொள்ள முடியாது. அதே போல் நிராகரிப்பும் வாழ்வின் ஒரு அங்கம் தான் என்பதையும், நாம் விரும்பும் அனைவரையும் நம்மால் நம்முடைய வாழ்வில் இணைத்துக்கொள்ள முடியாது என்ற அடிப்படைப் புரிதல் அவசியம். எப்படி மன வலிமையைப் பெறுவது, காதல் தோல்வியில் இருந்து மீண்டு, சிறந்த மனிதாக உருவெடுப்பது அவசியமாகும். 
உணர்வைப் புரிந்து கொள்ளுதல்
நிராகரிப்பு வேதனைப் படுத்தும் என்றாலும், அதில் இருந்து மீண்டு வருதல் தான் பண்பட்ட மனிதருக்கு அழகு. மன வலிமை உள்ளவர்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதில் இருந்து மீண்டு வருவார்கள். அத்துடன் எப்படி வேறு பணிகளில் கவனம் செலுத்தில், பிரச்னையில் இருந்து மீள முடியும் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள் என்கிறார் மன நல ஆலோசகர் வந்தனா. நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை ஆராய்ந்து, தம்மீதான அக்கறையை அதிகப்படுததிக் கொண்டு செயல்படுதலும் அவசியமானது. 
ஒரே ஒரு நிராகரிப்பில் உலகம் மூழ்கிவிடாது
நிராகரிப்பு என்பது வாழ்வில் மறக்க முடியாதது, நோ (இல்லை) என்று சொல்வது பொதுவானதாக இருக்கிறது. இதை அப்பா அம்மா, ஆசிரியரிடம் இடம் எதிர்பார்க்கலராம். அதை அதிகம் எதிர்கொள்ளும் குழந்தை தான் அதிக மன வலிமையுடன் இருக்கிறது. இதைத் தான் ஆய்வும் உறுதி செய்கிறது. ஒருவர் வேண்டாம் என்று கூறிவிட்டால், அதை அவர் அதை இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளலாம். ஒன்று அதன் மூலம் அவர் மனச் சோர்வு அடையலாம், அல்லது அவர் எதிராளியை ஏதாவது செய்துவிட வேண்டும், எனக்கு வலி கொடுத்தவர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்று பழிவாங்க நினைப்பது. அப்படி பழிவாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு மன ரீதியாக தாழ்வு மனப்பான்மை இருக்கும். நோ சொல்வதை ஏற்கும் தன்மை குறைவாக இருக்கும். அடம்பிடிக்கும் குழந்தை போல இருப்பவர்கள். 
சுயபரிசோதனை செய்துகொள்ள வாய்ப்பு
நிராகரிப்பை எதிர்கொள்வது என்பது ஆளுமைத் தன்மை சார்ந்தது. அதுவும் ஒருவிதமான வலிதான் (Psychological Pain). இதற்கு தீர்வும் காலம் தான். TIME heals. இந்த சின்ன வார்த்தை நிறைய விஷயத்தை உள்ளடக்கியது. தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். ஒரு நிராகரிப்பை வைத்து, தம்மிடம் எது இல்லை என்பதை அறிந்து வைத்து, சுய பரிசோதனை செய்து கொண்டு முன்னேறலாம். 2வது, நிராகரிப்பால் நிச்சயம் வலி இருக்கும். உடனே அதில் இருந்து வெளியே வர முடியாது. ஒருவர் தம்முடைய அன்பிற்கு உரியவரை, விரும்பிய பொருளை இழந்துவிட்டால் எப்படி அதில் இருந்து மீண்டு வருகிறாரே அது போலத் தான் இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வர வேண்டும். 
அதீத எண்ணங்களைத் தவிர்த்தல்
நிராகரிப்பை ஏற்றுக்கொண்டு, அதில் இருந்து மீண்டு வர ஏற்றுக்கொள்ள டைம் கொடுக்க வேண்டும். வாழ்வியல் முறையை பாசிட்டிவாக மாற்ற வேண்டும. மன ரீதியாக தாழ்வு மனப்பான்மையை குறைக்க வேண்டும். இத்துடன் முடிந்து போய்விடவில்லை, நான் நன்றாக இல்லை, நான் காதலிக்க தகுதி அற்றவன்(ள்) என்று நினைத்துக் கொள்ளாமல் அதில் சரி செய்ய வேண்டும். காதல், இழப்பு என்பது மட்டுமல்ல, அலுவலகத்தில் உங்களை நிராகரித்தால் கூட அதிலிருந்து எப்படி மீள்வது என்பதை ஆராய வேண்டும். அதில் இருந்து ஒரு காலத்தில் மீள முடியாவிட்டால் மனச்சோர்வு அதிகம் கொண்டிருக்கிறார் என்பதை உணர்வு அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையை குறைக்க வேண்டும். என் வாழ்க்கை முடிந்து போய்விட்டது என்பது போன்ற எக்ஸ்ட்ரீம் எண்ணங்களை தவிர்க்கக மன நல ஆலோசகர்கள் மற்றும் மனநல மருத்துவர்களை அணுகி தீர்வு காண வேண்டியது அவசியம். 
பாசிட்டிவ்களை கண்டறிதல்
நம்மிடமும் நிறைய பாசிட்டிவ் இருக்கு என்பதை உணர வேண்டும். பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் குறித்து தன்னைப் பற்றி சுயபரிசோதனை செய்து எழுதிட வேண்டும். அப்படி செய்தால் அதில் இருந்து வெளியே வரலாம், தம்முடைய திறமையையும் கண்டறிந்து கொள்ளலாம். ஆனால் இது சம்பவம் நடந்த உடனேயே செய்ய யாராலும் முடியாது. இது எல்லாம் இரண்டாவது முறையாகத் தான் செய்ய முடியும். 
நன்றியுணர்வை காட்டுதல்
நிராகரிப்பவரை அல்லது நோ சொல்பவரை வெறுப்புணர்வுடன் நோக்கக் கூடாது. அவர்களை முன்பைப் போலவே நன்றியுணர்வுடன் நோக்குவது நல்லது என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். நிராகரிப்பவர்களையே சவாலாக எடுத்துக்கொண்டு, அவர்கள் முன்னாலேயே வாழ்ந்து காட்டுவதும் நல்ல செயல். அவர்களையே உந்து சக்தியாக எடுத்துக்கொள்ள வேண்டும்
நண்பர்கள், குடும்பத்தினர் ஆதரவு
ஆனால் பரங்கிமலை படுகொலை சம்பவம் போன்றவற்றை ஆளுமைத் தன்மை இல்லாதவர்கள் மட்டுமே இப்படி செய்வார்கள். இவர்களை எல்லாமே நோயாளிகளாகவே நாங்கள் பார்க்கிறோம். அவர்களை தனிமைப்படுத்தக் கூடாது. அவர்களுக்கு குடும்பத்தினரும், நண்பர்களும் ஆதரவாக இருக்க வேண்டும். மனிதர்களால் ஒருபோதும் தனித்து இருக்கவோ, வாழவோ முடியாது. சப்போர்ட் வேண்டும். யாரும் இல்லை என்றால் கவுன்சிலிங் எடுத்துக் கொள்ளலாம். நிராகரிப்பு என்பது வளர்ச்சிக்கான முதல் படி. அப்படி எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்கிறார் மனநல ஆலோசகர் வந்தனா. 
நிராகரிப்பு, அடுத்த முயற்சிக்கு தடையல்ல
காதலில் ஒரு நிராகரிப்பு என்பது அடுத்த முயற்சிக்கு தடையாக இருந்துவிடக் கூடாது. அடுத்தடுத்த முயற்சிக்கு உந்துசக்தியாக வேண்டுமானால் அது இருக்கலாம். ஒரு நோவும், நிராகரிப்பும் வேதனை தரக்கூடியது தான் என்றாலும், அதனைக் கடந்து தான் வர வேண்டும் என்பதை ஒரு வெற்றியாளர் மட்டுமல்ல அனைவரும் உணர்ந்திருக்க வேண்டும். நிராகரித்துவிட்டார்களே என்று அதையே நினைத்து புலம்பிக் கொண்டிருக்காமல், அதிலிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா? தம்மை மேம்படுத்துக் கொள்ள இயலுமா என்று பார்ப்பது அவசியம். காதல் என்பதே காத்திருத்தல் தான். நல்ல நம்பிக்கையோடு, நல்ல எண்ணத்தோடு, தூய்மையான மனதோடு, நல்ல நட்புக்காக / துணைக்காக காத்திருக்க முடியாதவர்கள் காதலிக்கவே தகுதியற்றவர்கள்.
-ஜெயகார்த்தி







