பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு –  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு !

ஐபிஎஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் போலீஸ் துணை சூப்பிரண்டு காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தான் கைது செய்யப்பட்டதாக கூறி ஐபிஎஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஜாமின் மனு மீதான காணொலி காட்சி மூலம் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே தன்னை கைது செய்தனர்.

எனவே இந்த கைது சட்ட விரோதம், மேலும் நீதிமன்ற நடைமுறை சென்று கொண்டிருக்கும்போது கைது செய்தது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி.முத்துக்குமார், இந்த விவகாரத்தில் மனுதாரர் கைது செய்யப்பட்டாலும், சென்னை உயர்நீதிமன்றம் எவ்வித வாய்மொழி கருத்தையும் தெரிவிக்கவில்லை என வாதிட்டார்.

தொடர்ந்த காதர் பாட்ஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துர்கா தேவி, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க தொடங்கி இருப்பதாலும், சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையில் இந்த விவகாரம் இடம் பெற்றிருப்பதாலும், மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து விசாரிக்க வலியுறுத்தவில்லை என தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் கைதுக்கு எதிராக காதர் பாட்ஷாவின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.