வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில், “பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு வருகின்றன.
பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம் / குண்டு வெல்லம் ஆகியவற்றிற்கு Food Safety Standards (Food Products Standards and Food Additives) Regulation 2011-ல் தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெல்லம் / கருப்பட்டி – உணவு மாதிரிகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் 232 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 48 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டு இவற்றின் மீது சட்ட மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பனங்கருப்பட்டி வெல்லம் தயாரிக்கும்போது வெள்ளை / அஸ்கா சர்க்கரை மற்றும் கெமிக்கல் சேர்த்து தயாரிக்கப்படுவதாகவும், குண்டு வெல்லம் / அச்சுவெல்லம் தயாரிக்கும் போது மைதா, வெள்ளை / அஸ்கா சர்க்கரை சூப்பர் பாஸ்பேட், கால்சியம் கார்பனேட், சோடியம் ஹைட்ரோ சல்பேட் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற கெமிக்கல்களும் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் ஆகியவை கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது.
பொதுவாக கலப்படமற்ற வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் (Dark Brown) இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் வெளிர் பழுப்பு அல்லது அடர் மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
அதே போல் பொதுவாக கலப்படமற்ற பனங்கருப்பட்டி, வெளிர் பழுப்பு (Light Brown) நிறத்தில் இருக்கும் சர்க்கரை கலப்பட பனங்கருப்பட்டி கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும்
எனவே, வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் செய்யப்படும் கலப்படத்தை தடுக்க பொதுமக்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டி ஆகியவை தயார் செய்யப்படும் இடங்களின் முழு உற்பத்தி செயல்முறைகளை கண்காணிக்கவும், புகார்கள் ஏதும் பெறப்பட்டால் உற்பத்தி செய்யப்பட்ட செயல்முறைகளை மறு ஆய்வு செய்யவும், அனைத்து தயாரிப்பு நிலையங்களிலும் மூலப்பொருட்களின் வருகையில் இருந்து, உற்பத்தி செய்யப்படும் இறுதி நிலை வரை உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போதிய விழிப்புணர்வு இல்லாததால் பழுப்பு நிறத்தில் உள்ள வெல்லத்தை விட மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் உள்ள கவர்ச்சிகரமான வண்ணங்களில் உள்ள வெல்லம் சிறந்தது என தவறான கருத்து நிலவுகிறது.
இத்தகைய மஞ்சள் / ஆரஞ்சு / வெளிற் நிறங்களில் விற்கப்படும் வெல்லத்தை வாங்க வேண்டாமென்றும், இவ்வகையான வெல்லங்கள் விற்பனை செய்தால் அதுகுறித்து புகார் அளிக்கவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெல்லம் / கருப்பட்டி மற்றும் இதர உணவுப்பொருட்களில் செய்யப்படும் கலப்படம் மற்றும் தரம் குறைவு தொடர்பான புகார்களை 9444042322 என்ற “வாட்ஸ்” அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம். இப்புகார் குறித்து 48 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.








