நீலம் புரோடக்க்ஷன் தயாரிப்பில் பிராங்கிலின் ஜோசப் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது ரைட்டர் திரைப்படம். நீலம் தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவில் இதுவரை கையாளப்படாத கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் ரைட்டர் திரைப்படம் காவல்துறை அமைப்பில் நிலவும் சிக்கலைப் பேசியிருக்கிறது.
கதைச் சுருக்கம்
காவல்நிலையத்தில் ரைட்டராக இருக்கும் தங்கராஜ் ( சமுத்திரக்கனி) தனது பணி ஓய்வு நெருங்கும் நேரத்திலும் கூட காவலர்களுக்குத் தொழில் சங்கம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சட்டப் போராட்டம் நடத்துகிறார். சங்கம் அமைக்கும் தங்கராஜின் முயற்சி அவர் பணிபுரியும் காவல்நிலையத்தின் உயர் அதிகாரிக்குத் தெரியவந்ததும், தங்கராஜை அவமானப்படுத்தி வேறு காவல்நிலையத்திற்கு பணிமாற்றம் செய்கிறார். தங்கராஜ் புதிதாக பணியில் சேரும் காவல்நிலையத்தில், அவருக்கு தேவா (ஹரி கிருஷ்ணன்) என்ற பி.எச்.டி மாணவர் தப்பிச் செல்லாமல் கண்காணிக்கும் வேலை ஒதுக்கப்படுகிறது. காவல்துறை உயர் அதிகாரியின் அழுத்தத்தால் தேவா மீது பொய் வழக்கு புனையப்படுகிறது. பொய் வழக்கிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு தங்கராஜிடம் தேவா வேண்டிக் கேட்கிறார். இதற்கு தங்கராஜ் உதவுகிறாரா? பொய் வழக்கு ஏன் புனையப்படுகிறது. இறுதியில் தேவாவின் நிலை என்னவாகிறது என்பது மீதிக் கதை.
படத்தின் அரசியல்
பொதுவாக காவல்துறை அதிகாரிகள், காவலர்களை மாஸ் ஹிரோக்களாக சித்தரித்து கதைகள் உருவாக்கப்படுகிறது. அதுபோல காவலர்கள் அதிகாரத்திற்குத் துணைபோகிறார்கள் என்றும், காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் லாக் அப் படுகொலைகளைப்பற்றியும் சில படங்கள் வெளிவந்திருக்கிறது. ஆனால் காவலர்களின் பணிச்சுமை, அவர்கள் பணியாற்றும் சூழல், ஒட்டுமொத்த அமைப்பில் நிலவும் சிக்கலைப்பற்றித் தெளிவாக எந்த திரைப்படமும் அணுகியதில்லை. இதை ரைட்டர் திரைப்படம் அற்புதமாகப் பேசியிருக்கிறது. 8 மணி நேர வேலை, வார இறுதியில் விடுமுறை இப்படிப் பல விஷயங்கள் ஊழியர்களுக்கு சாத்தி்யமாகி இருப்பதற்கு முக்கிய காரணமாக தொழில் சங்கங்கள் இருப்பதையும், காவலர்களின் நலன்களை முறையிட சங்கம் வேண்டும் என்பதையும் படம் வலியுறுத்துகிறது. சாதி அரசியல் மற்றும் வர்க்க அரசியலைப் படம் சேர்த்துப் பேசியிருக்கிறது. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராக தேவா ( பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்) கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. தேவா மீது புனையப்படும் பொய் வழக்கின் காட்சிகள் நமக்கு ராம்குமாரின் மரணம் பற்றிய சந்தேகங்களை எழுப்புவதாக அமைகிறது. இதுபோல பெண் காவல்துறை அதிகாரியாக வரும் இனியா கதாபாத்திரம் உயிரை மாய்த்துக்
கொண்ட டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் சம்பவத்தை நமக்கு நினைவூட்டுவதாக அமைக்கப்படிக்கிறது.
நடிகர்கள்
சமுத்திரக்கனியை தவிர வேறு எவரும் இக்கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவார்களாக என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு அவர் நடித்திருக்கிறார். காவல்துறையினரின் உடல் மொழியைக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். குற்ற உணர்வில் அவர் தவிக்கும் காட்சிகள் அனைத்திலும் அவர் அசத்தியிருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலையில் கதாநாயகனாக நடித்திருந்த ஆண்டனிக்கு இத்திரைப்படம் திருப்புமுனையாக அமையும். குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல்நிலையத்திலேயே தங்கி சொன்ன வேலைகளை செய்யும் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் ஆன்டனி. காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் கவின் ஜெய் பாபு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். உயர் அதிகாரியின் உடல் மொழி, கோவத்தில் பேசும் இந்தி வசனங்கள், அதிகாரத் திமிரை வெளிப்படுத்தும் விதம் இப்படி அனைத்திலும் அவர் அசத்தியிருக்கிறார். மெட்ராஸ் திரைப்படத்தில் ஜானியாக நடித்து அசத்திய ஹரி கிருஷ்ணன் இத்திரைப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் ’மேக்கிங்
படத்தின் டைடில் கார்டு தொடங்கும்போது, பின்னணியில் கேட்கும் காவல்துறையினர் அணிவகுப்பின் ஒலி. காவல்துறையினர் பயன்படுத்தும் மொழி, அத்துறையின் நுணுக்கங்கள் இப்படி எல்லாவற்றையும் ஆராய்ந்து கதை அமைக்கப்பட்டிருக்கிறது. தேவா ( ஹரி கிருஷ்ணன்) கதாபாத்திரம் தப்பிச்செல்ல முயலும்போது, சமுத்திரக்கனி அவரை பிடிக்க முயற்சி செய்யும் காட்சி மிகவும் எதார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கும். 60 வயதை நெருங்கும், தொப்பை உடைய காவலர் தப்பிச்செல்லும் ஒருவரை எப்படிப் பிடிக்க முயற்சிப்பார் என்பதை மிகவும் எதார்த்தமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் பாடல், பின்னணி இசையமைத்த கோவிந்த் வசந்த் மீண்டும் தனது அசத்தும் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுபோலவே பிரதீப் காலிராஜாவின் ஒளிப்பதிவும், மணிகண்டன் சிவகுமாரின் படத்தொகுப்பும் படத்திற்கும் பலம் சேர்க்கிறது.
ரைட்டர் திரைப்படம் காவல்துறையினர் மீதான பொது கண்ணோட்டத்தை மாற்றியமைத்து, காவல்துறை அமைப்பில் நிலவும் சிக்கலை அலசியிக்கிறது.
செய்தித் தொகுப்பு: வாசுகி, நியூஸ் 7 தமிழ்








