செங்கல்பட்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, வங்கிக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு நோக்கி இன்று அதிகாலை 4 மணியளவில் கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் அருகே, திடீரென ஒரு வாகனம் சாலையை கடக்க முயன்றது.
அப்போது அந்த வாகனத்தின் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் லாரியை திருப்பியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிரே இருந்த வங்கியின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தின் போது வங்கியின் வாசலில் பணியிலிருந்த காவலாளி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர். விபத்தில் சிக்கிய லாரியின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர்களை மீட்டு அருகில் இருந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரியை இரண்டு கிரேன் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








