ஆஸ்கர் போட்டியில் ‘ராமாயணம்!’
இந்தியாவின் அதிக பொருட்செலவில் உருவான ‘ராமாயணம்’ திரைப்படம், அதன் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கணினி வரைகலை (CGI) பணிகளுக்காகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்திய சினிமாவின் மிகச்சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் படைப்புகளில் ஒன்றாகவும், ஹாலிவுட் படங்களுக்கு இணையான தரத்தில் இருப்பதாகவும் பலர் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர்.
இந்தப் படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை DNEG நிறுவனம் மேற்கொண்டுள்ளது. எட்டு முறை ஆஸ்கர் விருது வென்றுள்ள இந்நிறுவனம், இதற்கு முன்பு ‘Dune’, ‘Interstellar’ உள்ளிட்ட பல முக்கிய ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளது. இந்நிறுவனத்தின் பணிகள் காரணமாகவே, 2027-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் பரிசீலிக்கப்படும் முதல் 20 படங்களில் ‘ராமாயணம்’ இடம்பெற்றுள்ளது.
ஹாலிவுட் படங்களுடன் போட்டி!
‘ராமாயணம்’ திரைப்படம், ‘Dune: Part Three’, ‘Spider-Man: Brand New Day’, ‘The Odyssey’, ‘Project Hail Mary’, ‘Disclosure Day’, ‘Avengers: Doomsday’ உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் படங்களுடன் போட்டியிடுகிறது.
மேலும், ‘Whalefall’, ‘The Sheep Detectives’ போன்ற படங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஜப்பானின் பிரபலமான ‘Godzilla: Minus Zero’ திரைப்படமும் போட்டியில் உள்ளது. இந்தப் படம் உலகளவில் ‘ராமாயணம்’ திரைப்படத்துடன் ஒரே நேரத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய பாகமான ‘Godzilla Minus One’, 2025-ம் ஆண்டு ஆஸ்கர் விருதில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் விருது வென்றது.

கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுக்கும் தேர்வு!
சோனி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் வெளியான ‘ராமாயணம்’ திரைப்படம், சர்வதேச விருது சீசனிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்புடன், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதிலும் இரண்டு பிரிவுகளில் இப்படம் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு (Best Stunt Design) ஆகிய இரண்டு பிரிவுகளிலும் ‘ராமாயணம்’ இடம்பெற்றுள்ளது. இதற்கான தேர்வுப் பட்டியலை கிரிடிக்ஸ் சாய்ஸ் அசோசியேஷன் (CCA) திங்கள்கிழமை வெளியிட்டது.
‘ராமாயணம்’ திரைப்படம் குறித்து!
நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், வால்மீகி எழுதிய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்தில், ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஏராளமான நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவில் வெளியானபோது பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், வெளிநாடுகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சர்வதேச அளவில் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்ட பதிப்பாக ‘Ramayana: Rise of a Legend’ என்ற பெயரில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான 20 நாட்களில், ‘ராமாயணம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1,735 கோடி வசூலித்துள்ளது. இதில் வெளிநாடுகளில் மட்டும் 65 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




