தென் ஆப்ரிக்காவிடம் 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியுள்ளது.
உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது. உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.
இதனைத் தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி-காக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினர். சீரான தொடக்கத்தை கொடுத்து ரன்களை குவித்த நிலையில் கேப்டன் டெம்பா பவுமா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வாண்டர் துசென் 26 ரன்களில் ஆட்டமிழக்க மார்கரம் மற்றும் டி-காக் ஜோடி சேர்ந்தனர்.
சிறப்பாக விளையாடிய டி-காக் சதமடித்து அசத்தினார். அவர் 106 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். கடந்த போட்டியிலும் டி-காக் சதமடித்திருந்தார். மார்கரம் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 44 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன்பின் களமிறங்கியவர்களில் க்ளாசன் (29 ரன்கள்), டேவிட் மில்லர் (17 ரன்கள்), மார்கோ ஜேன்சன் (26 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் இந்த இணை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மார்ஷ் 7 ரன்களிலும், டேவிட் வார்னர் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்களில்ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. கடந்த முறை இந்தியாவுடன் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது தென் ஆப்ரிக்காவுடனும் தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







