ராஷ்ட்ரபத்னி விவகாரம் – “காங்கிரஸ் மன்னிப்பு கோர வேண்டும்”

குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபத்னி என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா…

குடியரசுத் தலைவரை ராஷ்ட்ரபத்னி என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “ஆமாம், ராஷ்ட்ரபதியை பார்க்க உள்ளோம்; இல்லை இல்லை ராஷ்ட்ரபத்னி, அனைவருக்கும்” என தெரிவித்தார்.

அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மக்களவை கூடியதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆதிர் ரஞ்சனின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த அமளி காரணமாக, நாடாளுமன்றம் ஒத்திவைப்பட்டது.

பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்த பாஜக எம்பிக்கள், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது ஆளுமை காரணமாக சுயமாக உருவான தலைவர் என குறிப்பிட்டார். அவரை தரக்குறைவாக விமர்சித்த காங்கிரஸ் கட்சி, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார். பழங்குடியின மக்களை தரம் தாழ்த்துவதை காங்கிரஸ் கட்சி வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்தார்.

இதை குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரவில்லை என்றும், சோனியா காந்தியின் பேச்சு தவறானது என்றும் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் மனப்பான்மையையே இது வெளிப்படுத்தி இருக்கிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பழங்குடியின மக்களை இழிவுபடுத்துவதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு மன்னிப்பு கோர தேவையில்லை என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறி இருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள பியூஷ் கோயல், அவரது இந்த பேச்சுக்காக காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினார்.

நாட்டின் மிக உயரிய பொறுப்பில் இருப்பவர் குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசி இருப்பது தரம் தாழ்ந்த ஒன்று என கண்டித்துள்ள மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், அவரது பேச்சு பழங்குடியின மக்களுக்கு எதிரானது; பெண்களுக்கு எதிரானது என குறிப்பிட்டார்.

தனது பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தவறுதலாக அவ்வாறு பேசிவிட்டதாகவும், இதற்காக தன்னை தூக்கில் போட வேண்டும் என்றாலும் போடட்டும் என்றும் கூறியுள்ளார். அதேநேரத்தில், மன்னிப்பு என்ற கேள்வியே எழவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.