மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 38 பேர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக பிரபல நடிகரும் பாஜக பிரமுகருமான மிதுன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்த மிதுன் சக்ரவர்த்தி, சமீப காலமாக தீவிர அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், இன்று கொல்கத்தாவில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்த மிதுன் சக்ரவர்த்தி, அக்கட்சி எம்எல்ஏக்களுடன் உரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 38 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்களில் 21 பேர் தன்னுடன் நேரடி தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.
அவரது இந்த பேச்சை திரிணாமூல் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தான் கேள்விப்பட்டதாகவும், மன ரீதியில் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என தான் எண்ணுவதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் தெரிவித்துள்ளார். உண்மையில் அவருக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது என்றும் அவர் விமர்சித்தார்.
மிதுன் சக்ரவர்த்தி பிரபல நடிகர் என்பதால், விதவிதமாக கனவு காண்பது எப்படி என்பது அவருக்கு நன்கு தெரிந்திருக்கும் என்றும், ஆனால், அவரது கனவு நனவாகாது என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்பி டோலா சென் தெரிவித்துள்ளார்.









