காங்கிரஸுக்கு செயல் தலைவர்களாக நால்வர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இருவரும் போட்டியில் உள்ளனர். இதற்காக அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகங்களிலும் வாக்குப்பதிவுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
தேர்தல் முடிந்து, 19 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்பட்டு தலைவர் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார். இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு பின் நான்கு செயல் தலைவர்கள் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நாடு முழுவதும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தலா ஒரு செயல்தலைவரை நியமிக்க உள்ளனர். அதன்படி, கிழக்கு மண்டலத்திற்கு பிரியங்கா காந்தி, மேற்கு மண்டலத்திற்கு சச்சின் பைலட், வடக்கு மண்டலத்திற்கு முகுல் வாஸ்னிக், தெற்கு மண்டலத்திற்கு ப.சிதம்பரம் ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு எனவும் காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.







