இந்தியை திணிக்க முயன்றால் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இந்தி திணிப்பை கண்டித்து, திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தி திணிப்புக்கு எதிராகவும், ஒரே நுழைவுத் தேர்வு முறையை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த போராட்டம் 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரைக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்தியை திணிக்க முயன்றால் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
இதேபோல மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து, திருச்சி மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி, அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிடாவிட்டால் மீண்டும் ஒரு மொழி போரை சந்திக்க நேரிடும் என கோஷங்களை எழுப்பினர்.







