ரூ.4.2 லட்சம் கோடியை மக்களிடம் இருந்து மத்திய அரசு வசூலித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிறிவெல்லா பிரசாத், மக்களவை உறுப்பினர் சசி தரூர் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய சசிதரூர், “பெட்ரோல் விலை நேற்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் பெட்ரோலின் விலை 102 ரூபாயாக உள்ளது. மும்பையில் இதை விட அதிகமாக உள்ளது. பாஜகவின் தவறான ஆட்சியால் இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை மலை போல ஏறியுள்ளது. இந்தியாவில் தான் வேலையில்லாதோர் விகிதம் அதிகமாக இருந்துவருகிறது” என்று குற்றம்சாட்டினார்.
இந்திய பொருளாதாரம் பாஜக அரசால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சசிதரூர், இதனை சாதாரணமான பொருளாதார வீழ்ச்சியாக எடுத்துக்கொள்ள முடியாது. பாஜக ஆட்சிக்கு வந்த 7 வருடங்களில் பெட்ரோல், டீசல் வரியாக இதுவரை ரூ.4.2 லட்சம் கோடியை மக்களிடம் இருந்து மத்திய அரசு வசூலித்துள்ளது என்றார்.
பெட்ரோல் மற்றும் டீசல் வரியை குறைக்க வேண்டும் எனவும், மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ் டி வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றார் சசிதரூர். மேலும், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. அதேபோல இந்தியா முழுவதும் உள்ளது. கொரோனா 3 ஆம் அலைக்குள் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என்றால் மோடி அரசு தான் பொறுப்பேற்று கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.