பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதலமைச்சர் யார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு ஆளுங்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். அவர்களிடையே மோதல் போக்கு நிலவி வந்தது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாதது காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியாக மாறியது. இதனிடையே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் சித்து அறிவித்தார். இதனால், அதிருப்தியடைந்த அமரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமரீந்தர் சிங், 3-வது முறையாக தான் அவமானப்படுத்தப் பட்டதாகக் கூறினார். காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன் என தெரிவித்த அவர், மேலிடத்தின் விருப்பப்படி, யாரை வேண்டுமானாலும் முதலமைச்சராக நியமித்துக் கொள்ளட்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் 78 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்ய சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கி வழக்கம் போல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர், சுக்ஜிந்தர் சிங் ரந்த்வா ஆகியோர் பெயர்கள் முதலமைச்சர் பதவிக்கு பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சருடன் இரண்டு துணை முதலமைச்சர்களும் நியமிக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.








