குஜராத்தில் காங்கிரஸ் கட்சி அழிந்து விட்டது- கெஜ்ரிவால்

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி அழிந்து விட்டது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள…

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி அழிந்து விட்டது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. இதேபோல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இதன்படி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்திற்கு சென்றுள்ளார். அவர் இந்த பயணத்தின் போது, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் அல்லது மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், பாஜக தொடர்ந்து முதலமைச்சர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது. குஜராத், கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக முதலமைச்சர்களை மாற்றியுள்ளது என்று கூறினார்.

செய்தியாளர் காங்கிரஸ் குறித்து கேள்வி கேட்டார். அப்போது அவர், குஜராத்தில் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வந்தது விட்டது. எனவே அவர்களை பற்றிய கேள்விகளை நிறுத்துவோம் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.