குஜராத்தில் காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது- நாராயணன் திருப்பதி

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறினார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, சென்னை தியாகராய நகரில் உள்ள…

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறினார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில், தமிழ்நாடு பாஜக மாநில செய்தி தொடர்பாளரும் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை
சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவிற்கு இன்று ஒரு மகத்தான நாள். 7 ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக குஜராத்தில் எதிர்கட்சி அந்தஸ்த்தை காங்கிரஸ் இழந்துவிட்டது. இது பிரதமர் மோடிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என கூறினார்.


திமுக கூட்டணி கட்சிகள் குஜராத்தில் பாஜக மண்ணை கவ்வும் என கூறினார்கள். ஆனால், தற்போது மண்ணை கவ்வி இருப்பவர்கள் அவர்கள் தான். குஜராத் போல தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் என தமிழக மக்கள் நினைக்க வேண்டும். ஹிமாச்சல் பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தற்போது வரை முடியவில்லை. அங்கு மிக குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் தான்  உள்ளது. ஆம் ஆத்மி கட்சி தலையும் இல்லாத வாலும் இல்லாத கட்சி. காங்கிரசின் பலவீனம் ஆம் ஆத்மியின் பலம் என்று கூறினார்.

டெல்லி மாநகராட்சியில் பாஜக தோல்வி குறித்த கேள்விக்கு, டெல்லி மாநகராட்சியில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளது. கருத்து கணிப்பை விட அதிக வெற்றிகள் பெற்றுள்ளோம். எனவே அதை வெற்றியாகவே பார்க்கிறோம். இது எங்களுக்கு முன்னேற்றம் என தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காதது குறித்த கேள்விக்கு,
ஆன்லைன் ரம்மி தடை குறித்த அவசர சட்டத்தை தமிழக அரசு ஏன் அமல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். இந்த சட்டம் அமலாகாததற்கு தமிழக அரசு தான் காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.