கோவையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தீய சக்தியை எதிர்த்து செய்வதாக கூறிய த.வெ.க, தீய சக்தியின் ஒரு பங்காக இருந்தவர்கள் உடன் சேர்ந்து ஆட்சி நடத்துகிறது. காங்கிரஸ் புறவாசல் வழியாக அமைச்சரவைக்குள் வந்துள்ளது. காங்கிரஸ் பல மாநிலங்களில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி. பல ஊழல் செய்த கட்சி. மாற்றத்தை கொண்டு வருவதாக கூறிய த.வெ.க காங்கிரசை வைத்து கொண்டு எப்படி மாற்றம் தரும்?
காங்கிரஸ் தரும் அழுத்தத்திற்கு த.வெ.க இடம் தரக் கூடாது. கடந்த திமுக ஆட்சியில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப் பிடித்ததால் தான் மக்கள் அக்கட்சியை புறக்கணித்தார்கள். பிஎம் ஶ்ரீ போன்ற மத்திய அரசின் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைக்கு ஆதரவு தர வேண்டும். வந்தே மாதரம் விமர்சனம் தேவையில்லாதது. அப்பாடல் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பிய பாடல். அப்பாடலை முதலில் பாட வேண்டும் என உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அது நாட்டிற்கான வழிமுறை. அதை கடைபிடிக்க வேண்டும்.
இனி மேலும் அத்தகைய உணர்வு பூர்வமான அரசியலுக்கு பதிலாக ஆக்க பூர்வமான அரசியல் செய்ய வேண்டும். பிரதமர் மோடி வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்வது பெட்ரோல் சேமிக்கவும் கொடுக்கவும் தான். பிரதமர் மோடி ராகுல் காந்தியை போல சுற்றுலா செல்லவில்லை. மெலொடி சாக்லேட் விமர்சனம் குறித்த கேள்விக்கு, இனிப்பான செய்தி, இனிப்பு தருவதை விமர்சனம் செய்யக் கூடாது என பதிலளித்தார்.
7 பட்டியலினத்தவருக்கு அமைச்சரவையில் இடமளித்து இருப்பது ஆரோக்கியமானது. அவர்கள் சிறப்பாக செயல்பட முதலமைச்சர் விஜய் வழிகாட்ட வேண்டும். ஆக்கப் பூர்வமான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.







