“ஜல்லிக்கட்டை தடை செய்தது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான்”- பிரதமர் மோடி!

தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, மதுரை பாண்டிகோவில் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். வெற்றி வேல் வீர வேல் என தனது பரப்புரையை…

தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, மதுரை பாண்டிகோவில் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

வெற்றி வேல் வீர வேல் என தனது பரப்புரையை தொடங்கிய பிரதமர், மதுரை மண்ணை புகழ்ந்து கூறி, எம்.ஜி ஆரின் மதுரை வீரன் திரைப்படம் குறித்தும் நினைவுகூர்ந்தார். அதனைத் தொடர்ந்து, “எம்.ஜி.ஆர் 3 முறை தென் தமிழகத்தில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். எம்.ஜிஆருக்கு உறுதியான ஆதரவை அளித்தவர்கள் மதுரை மக்கள்.” என்று கூறினார்.

மேலும், “நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி பணியாற்றி வருகிறது. உள்கட்டமைப்பு, டிஜி்ட்டல் தொழில்நுட்பம் போன்றவற்றிற்காக மத்திய அரசு அதிக அளவு நிதி ஒதுக்கியுள்ளது. நாட்டின் உள்கட்டமைப்புக்காக ரூ.100 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மதுரை கொல்லம் ரயில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமப்புறங்களில் விரிவான அலைவரிசை சேவையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ரயில்வே திட்டங்களுக்கு 237 சதவிகிதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் இதுவரை 16 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டிற்குள் இது அனைத்து வீடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.” என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

மேலும், “ஜல்லிக்கட்டை தடை செய்தது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான். “2016ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலேயே ஜல்லிக்கட்டை தடை செய்வோம் என கூறியிருந்தது. இந்த விளையாட்டை காட்டுமிராண்டித்தனமானது என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்” என்று காங்கிரஸ்-திமுக கூட்டணியை விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து, “மதுரை கொல்லம் பொருளாதார வழித்தடம் நிறைவேற்றப்படும். விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு வேளாண் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். வரிக்கொடுமையை மத்திய அரசு குறைத்துக்கொண்டிருக்கிறது. மித்ரா திட்டம் கீழ் தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கப்படும்.” என்று சிறப்புரையாற்றினார்.

இறுதியாக, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்தது. எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். தரமான சிகிச்சை எய்ம்ஸ் மருத்துவமனை வழியே கிடைக்கும். மத்திய அரசு மருத்துவ கட்டமைப்புக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக மருத்துவ படிப்புகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு உள்ளது. தேவேந்திர குல வேளாளர் மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலையும். திமுகவும், காங்கிரசும் பெண்களை அவமானம் செய்து வருகிறது.” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.