சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில், பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, துபாய்க்கு செல்வதற்காக சென்ற ராமநாதபுரத்தை சேர்ந்த நஜிருதீன்(30), ராஜா முகமது(32), ஜாகீர் உசேன் (32) மற்றும் கொழும்பு செல்ல வந்த விஷ்ணு சாகர்(28), தாய்லாந்து பாங்காக் செல்ல வந்த சென்னையை சேர்ந்த அப்சர் அலி(27) ஆகியோரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, 5 பேர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை தீவிரமாக சோதனை செய்ததில் அவர்கள் 5 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் அவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், ஆடைகளுக்குள் வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
மேலும் கால் செருப்பில் இருநது கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள், சவூதி ரியால்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. 5 பேரிடம் இருந்தும் 50 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிளநாட்டு கரன்சிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







