ஆர்எஸ்எஸ்-ஐ கண்டித்தும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் 50க்கும் மேற்பட்ட மதச்சார்பற்ற இடதுசாரி மற்றும் ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்தோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மதச்சார்பற்ற இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் சார்பாக திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி மற்றும் கொடைக்கானல் ஆகிய நான்கு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் , மதிமுக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மதச்சார்பற்ற இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நிலவும் பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் உள்ளிட்ட வெறுக்கத்தக்க செயல்களைக் கண்டிக்கும் விதமாகவும் தமிழ்நாட்டை மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் பிரித்தாளும் சூழ்ச்சியை சங்பரிவார் மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
பாஜக அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமாக செயல்பட்டு வருவதாகவும், மொழி திணிப்பு, மாநில சுய ஆட்சியை பறிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் ஆளுநர் தலைமையிலான மற்றொரு எதிர் ஆட்சியை பாஜக அரசாங்கம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து கோசங்கள் எழுப்பப்பட்டன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சமூக நல்லிணக்கம், மத ஒற்றுமை மற்றும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி ஜாதி அரசியல், மத அரசியலை வெறுத்து ஒதுக்கும் நோக்கமாக இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.







