கேஸ் குடோன் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு

செங்கல்பட்டு அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் கேஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி சாந்தி பெயரில் A.S.N.S பாரத்…

செங்கல்பட்டு அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் கேஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின்
மனைவி சாந்தி பெயரில் A.S.N.S பாரத் கேஸ் ஏஜென்சி நடைபெற்று வந்தது. இந்த கேஸ் குடோனில் கமர்ஷியல் சிலிண்டருக்கும் தொழிற்சாலை சிலிண்டர்களுக்கும்
மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில் அனுமதியின்றி கேஸ் நிரப்பும் பணியையும்
செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி இரவு 7 மணியளவில் கேஸ் சிலிண்டரை இறக்கும்போது தவறுதலாக கீழே விழுந்ததில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 80/90 சதவீதத்துக்கு மேல் படுகாயம் அடைந்த ஜீவானந்தம், சந்தியா, பூஜா, அருண், குணால் ஆகிய 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் 30/50 சதவீத தீக்காயங்களுடன் நிவேதா, சக்திவேல், சண்முகப்பிரியன், கோகுல், தமிழரசன், கிஷோர், வட மாநிலத்தை சேர்ந்த அமோத்குமார் ஆகிய 7 பேரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7
பேரில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் சக்திவேல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் நிவேதா ஜீவானந்தம் சிகிச்சை பெற்று வருகிறார்.


செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இன்று பூஜா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கேஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பாக தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார்
மற்றும் கேஸ் குடோன் மேலாளர் மோகன்ராஜ் ஆகிய 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். தலைமறைவாக உள்ள கேஸ் குடோன் உரிமையாளர் சாந்தியை பிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.