தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், 36 பேருக்கு புதிய இ-சேவை மையங்கள் தொடங்குவதற்கான முகமை ஆணைகளை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து திட்டங்களும் கணினி மயமாக்கப்பட்டு மக்களுக்கு எளிமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருவதாக கூறினார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் இ-அலுவலகம் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கணினி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும், வெகுவிரைவில் தற்போது உள்ள இணையதள பிரச்சனைகள் சீரமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.