1000 வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு: உரிமையாளர்கள் புகார்

சென்னை அருகே தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் ஆயிரம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்காமல் தனியார் கட்டுமான நிர்வாகம் அலைக்கழிப்பதாக வீட்டின் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மேடவாக்கத்தை அடுத்த ஜலடியன்பேட்டையில் தனியார் கட்டிட…

சென்னை அருகே தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் ஆயிரம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்காமல் தனியார் கட்டுமான நிர்வாகம் அலைக்கழிப்பதாக வீட்டின் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மேடவாக்கத்தை அடுத்த ஜலடியன்பேட்டையில் தனியார் கட்டிட நிறுவனம் 19 அடுக்குகளை கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை கட்டியது. 60 லட்ச ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து இந்த அடுக்குமாடி வீடுகளில் உரிமையாளர்கள் குடியேறினர். ஆனால், ஒப்பந்தத்தில் கூறியபடி, வீடுகளுக்கு நேரிடையாக மின்சார இணைப்பு பெற்று தரவில்லை என புகார் எழுந்தது.

மேலும், ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் வழங்குவதால் தங்களின் மின்சாதன மற்றும் மின்னணு பொருட்கள் சேதமடைவதாகவும், புகார் தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், முன்பதிவு செய்த சிலர் வீடு வேண்டாம் என்று தெரிவித்தும், கட்டிய முன்பணத்தை திரும்ப தராமல் அலைக்கழிப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். தகவலறிந்த பள்ளிக்கரணை போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.