தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணை வந்தது. அப்போது, ஆகஸ்ட் மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடகா பிரச்னை செய்து வருவதாகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் செயல்படுத்துவதில்லை எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பில், தற்போதைய சூழலில் 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரை மட்டுமே திறக்க முடியும் என கூறப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு மட்டும் தண்ணீர் கேட்பதாக கூறிய கர்நாடக அரசு தரப்பு,
கர்நாடகாவில் குடிநீருக்கு தண்ணீர் தேவை உள்ளதால், தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறப்பதில் பிரச்னை உள்ளதாக தெரிவித்தது.
இதனை அடுத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட ஆதரவு அமைப்பினர் வெள்ளிக்கிழமை கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அம்மாநில விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாண்டியாவிலும் பெங்களூரிலும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், கர்நாடகா முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த முழு அடைப்புக்கு கர்நாடகம் முழுதும் ஆயிரத்து 900 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க, மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த, டி.ஜி.பி., அலோக் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் சனிக்கிழமை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக மாநகர காவல்துறை ஆணையர் தயானந்த் அறிவித்துள்ளது.