ஹைதராபாத்தில் உள்ள புகழ் பெற்ற பாலபூர் விநாயகர் கோவில் லட்டு ரூ. 27 லட்சத்துக்கு ஏலம் போன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலபூர் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மிக பிரமாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின் ஒரு பகுதியாக சுத்தமான நெய் மற்றும் உலர்ந்த பழங்களை கொண்டு அதிக எடை கொண்ட லட்டு தயாரிக்கப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டு விநாயகர் முன்பு வெள்ளி கிண்ணத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டும். கடந்த 30 ஆண்டுகளாக இதுபோன்று பூஜை செய்யப்படும் லட்டுவை கோவில் நிர்வாகத்தினர் ஏலம்விட்டு வருகின்றனர். அதன்படி, இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் சாமி முன்பு படைக்கப்பட்ட 21 கிலோ எடையுள்ள லட்டுவை வியாழக்கிழமை ஏலம் விட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆரம்ப விலையாக கோவில் நிர்வாகத்தினரால் ரூ.1,116 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், உள்ளூர், வெளியூர் நபர்கள் என 36 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தின் முடிவில், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த தசரி தயானந்த் ரெட்டி என்பவர் 27 லட்சம் ரூபாய்க்கு லட்டுவை வாங்கியுள்ளார். கடந்த ஆண்டு ரூ.24.60 லட்சத்துக்கு ஏலம் போனதே இதுவரை அதிக தொகையாக இருந்தது. இந்த லட்டுவை ஏலம் எடுத்த தசரி தயானந்த், அவரது பெற்றோர்களுக்கு பரிசளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்முறையாக கடந்த 1994-ஆம் ஆண்டு விவசாயி ஒருவர் பாலபூர் விநாயகர் லட்டுவை ரூ.450-க்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.