இயக்குநர்கள் பாரதிராஜா – பாக்கியராஜ் நினைவைப் போற்றும் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’ – தமிழ் திரை உலக சங்கங்கள் ஏற்பாடு

இயக்குநர்கள் பாரதிராஜா – பாக்கியராஜ் நினைவைப் போற்றும் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’ ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ் திரையுலகிற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய தென்னிந்தியத் திரையுலகின் முன்னோடி இயக்குநர்களான மறைந்த பாரதிராஜா மற்றும் கே.பாக்கியராஜ் ஆகியோரின் சாதனைகளையும் நினைவுகளையும் போற்றும் வகையில் சென்னையில் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’ எனும் பிரம்மாண்ட விழா ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது . இதில் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

இது தொடர்பாக ​சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குனர்கள் கே எஸ் ரவிக்குமார், லிங்குசாமி , பி வாசு , ஏ எல் விஜய் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் இயக்குநர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, இயக்குநர் ஆர்.கே. செல்வமணி கூறுகையில், ​சென்னை கலைவாணர் அரங்கத்தில், ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் இந்த விழா நடைபெறவுள்ளதாகவும் இரு இயக்குநர்களுக்கும் அவர்களது சொந்த ஊர்களில் (தேனி மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதி) மணிமண்டபம் அமைப்பதற்கான தொடக்க முயற்சியாக இவ்விழா அமையும் மேலும், அவர்களின் நினைவாக வெண்கலச் சிலைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். கே.பாக்கியராஜ் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டு, அதனை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொள்வதாகவும், அஜய் பாலா எழுதிய பாரதிராஜா பற்றிய புத்தகமும் இவ்விழாவில் வெளியிடப்படவுள்ளதாக கூறினார் மேலும் இருவரின் திரைப்பயணத்தை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சியும் , இதுவரை பற்றி 10 நிமிட காணொளியை இயக்குனர் ஏ எல் விஜய் உருவாக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் திரைப்படக் கல்லூரி மற்றும் விஸ்காம் மாணவர்களுக்காகத் துறை சார்ந்த கலந்துரையாடல் (Master Class) நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர்இவ்விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாகவும் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, ஜாக்கி ஷெராஃப், போனி கபூர் உள்ளிட்ட பல்வேறு இந்திய திரையுலக ஆளுமைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார். தமிழக முதல்வர் மற்றும் மக்கள் தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கும் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவ்விழாவில் கலந்துகொள்ள விரும்பும் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனுமதி இலவசம் என தெரிவித்தார். அரங்கிற்கு வெளியே பெரிய திரைகள் (Screens) அமைக்கப்பட்டு நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் என்றார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி (FEPSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இவ்விழாவை நடத்த உள்ளதாக கூறிய அவர் இயக்குநர் பார்த்திபன் படைப்பு ரீதியான முதன்மை பொறுப்பாளராகச் (Creative Head) செயல்பட, இயக்குநர்கள் லிங்குசாமி, ஏ.எல். விஜய், சரண், தீனா ஆகியோர் விழா வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.