CSK-வின் தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மு ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 17 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியவர் நியூசிலாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் பிளமிங். இவரது வழிகாட்டுதலிலும், தோனியின் தலைமையிலும் சூப்பர் கிங்ஸ் அணி பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் முடிந்ததும் சிஎஸ்கேவின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளமிங் விலகுவதாக அறிவித்தார். 2023-ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணி கோப்பையைக் கைப்பற்றத் தடுமாறிய நிலையில் அவர் விலகினார்.

இதனையடுத்து, சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார்கள் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. சென்னை அணியின் அடையாளமாக விளங்கிய, அண்மையில் ஓய்வை அறிவித்த சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு ரசிகர்களிடையே கலவையான கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒருபுறம், தோனி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மறுபுறம், ஜாகீர் கான் நியமிக்கப்பட்டதற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.