ஆபத்தான கட்டிடங்களை அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை-காவல் ஆணையர்

கட்டிட விபத்தில் தலைமைக்காவலர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி காரணமாக நோட்டீஸ் கொடுத்தும் ஆபத்தான கட்டிடங்களை அகற்றாத உரிமையாளர்கள் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

கட்டிட விபத்தில் தலைமைக்காவலர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி காரணமாக நோட்டீஸ் கொடுத்தும் ஆபத்தான கட்டிடங்களை அகற்றாத உரிமையாளர்கள் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாநகர் கீழ வெளிவீதி பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்த விபத்தில் இரவு நேர ரோந்து பணியில் இருந்த மதுரை விளக்குத்தூண் காவல்நிலைய தலைமைக்காவலர்கள் சரவணன் மற்றும் கண்ணன் ஆகியோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியதில் காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். உடனிருந்த காவலர் கண்ணன் படுகாயங்களுடன் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மாநகராட்சியின் உத்தரவை மதிக்காமல் அலட்சியமாக செயல்பட்டது விபத்து மற்றும் உயிரிழப்புக்கு காரணம் என்ற புகாரின் கீழ் கட்டிடத்தின் உரிமையாளர் முகமது இத்ரீஸ், மேலாளர் அப்துல் ரசாக், கடை வாடகைதாரர்கள் நாகசங்கர், சுப்பிரமணி உள்ளிட்ட 4 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், பழுதடைந்த, மிகவும் பழைய நிலையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் உபயோகத்தில இல்லாத மராமத்து பார்க்கப்படாமல் இடியும் மற்றும் இடிந்த நிலையிலுள்ள கட்டிங்கள் மற்றும் மதுரை மாநகராட்சியினால் கட்டிங்களை அகற்றசொல்லி நோட்டீஸ் கொடுக்கப்பட்ட கட்டிடங்கள் ஆகியவற்றின உரிமையாளர்கள் உரிய நடைமுறைகளை கடைபிடித்து கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அலட்சியமாக உயிர்சேதம் ஏற்படும் வகையில் மெத்தனமாக நடந்து கொள்ளும் கட்டிட உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.