பத்திரப்பதிவு அலுவலகங்கள் கணினிமயமாக்கபட்டதால் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சத்தை தவிர்க்கலாம் என மதுரையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
வணிக வரி மற்றும் பதிவுத்துறை கடந்த ஆண்டு 1 இலட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது எனவும், நடப்பு ஆண்டில் இரண்டு துறைகளிலும் வருவாய் அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் ஒன்றாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் பதிவுக்கு முந்தைய நாளில் ஆன்லைனில் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்தில் 15 நிமிடங்களுக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வேண்டிய பதிவுக்கட்டணங்கள் அனைத்தும் இணைய வழியில் மட்டுமே செலுத்த வேண்டும். 100 ரூபாய் செலுத்த வேண்டுமானால் கூட ஏ.டி.எம் கார்டு வழியாக பதிவுக் கட்டணம் செலுத்தலாம். இதனால் பத்திரப்பதிவுத்துக்கு வருபவர்கள் கைகளில் பணம் கொண்டு வர தேவையில்லை.
மேலும், பத்திரப்பதிவு அலுவலகங்கள் கணினிமயமாக்கபட்டதால், பதிவுத்துறை அலுவலகங்களில் நேரடி பண பரிவர்த்தனை நடைபெறாது, மேலும் பதிவுக்கு யாரவது லஞ்சம் கேட்டால் பதிவுத்துறை தலைவருக்கு புகார் அளிக்கலாம், பொது மக்களுக்காக பதிவுத்துறையை மேம்படுத்த ஸ்டார் 3.0 எனும் பதிவுத்துறை செயலி விரைவில் கொண்டு வரப்படும். மேலும் அரசின் சந்தை வழிகாட்டு மதிப்பை செலுத்தி மக்கள் பதிவு செய்யும் படியும் கேட்டுக்கொண்டார்.
பதிவுக் கட்டணம் அனைத்தும் ஆன் லைன் வழியாக பெற வேண்டும் என சார் பதிவாளர்களுக்கு எச்சரிக்கையாக கூறிய அவர், தமிழ்நாடு அரசு அனுமதி பெறாமல் வீட்டு மனைகள் பதிவு செய்யும் சார் பதிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் பதிவுத்துறை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது, தவறுகள் நடக்கும் பட்சத்தில் யாரும் வேண்டுமானாலும் புகார்கள் செய்யலாம், உண்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.






