”தளபதி 68 சும்மா தெறிக்கும். காத்திருங்கள்” என விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தளபதி விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படம், வரும் அக்டோபர் 19 வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் விஜய் நடிக்கும் ’தளபதி 68’ படம் குறித்த தகவல்கள் வெளியானது. அதுவும் லியோ படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், அதற்குள் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 68 படம் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளியானது. முதலில் தளபதி 68 அட்லீ இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், பின்னர் அவர் பாலிவுட்டில் பிசியானதால் பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இறுதியில் ’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வெகுநாட்களாகவே “தளபதி 68” அப்டேட்டுக்காக கழுகு போல் காத்திருக்கும் விஜய் ரசிகர்கள் வெங்கட் பிரபுவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வெங்கட் பிரபு ”நண்பன் ஒருவன் வந்த பிறகு” என்ற படத்தின் அப்டேட்டினை வெளியிட்டார். ஆனால் அவர் வெளியிடப்போகும் தகவல் விஜய் பட அப்டேட் என நினைத்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் இறுதியில் ஏமாற்றம் அடைந்தனர்.
இதேபோல் ஏமாற்றமடைந்த ரசிகர் ஒருவர் தான் விஜய் படத்தின் அப்டேட் என நினைத்ததாகவும், அதனால் என்ன வாழ்த்துக்கள் எனவும் வெங்கட் பிரபு வெளியிட்ட பதிவில் கமெண்ட் செய்திருந்தார். அதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு, “தளபதி 68 சும்மா தெறிக்கும். காத்திருங்கள்” என பதிலளித்துள்ளார். இந்த ஒரு கமெண்ட்டை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.







