“வாராய் நீ வாராய் போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்”

தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர் யார் தெரியுமா?, மந்திரி குமாரி திரைப்படத்தில், பாடிய ‘வாராய் நீ வாராய்’ என்ற பாடல் மூலம் அடையாளங் காட்டப்பட்ட திருச்சி லோகநாதன்தான் அவர். முதன் முதலில் எம்.ஜி.ஆர்.…

தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர் யார் தெரியுமா?, மந்திரி குமாரி திரைப்படத்தில், பாடிய ‘வாராய் நீ வாராய்’ என்ற பாடல் மூலம் அடையாளங் காட்டப்பட்ட திருச்சி லோகநாதன்தான் அவர். முதன் முதலில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த “ராஜகுமாரி” திரைப்படத்தில் பின்னணி பாடியவர் ..

சிவாஜிகணேசனுக்காக கள்வனின் காதலி திரைப்படத்திலும், எம்ஜிஆருக்காக ‘மர்மயோகி’ ‘சர்வாதிகாரி’ ஆகிய திரைப்படங்களிலும் பாடியிருக்கிறார். நடிகர்களுக்காக குரலை மாற்றாமல், இயல்பான குரலிலேயே பாடும் திருச்சி லோக நாதன், மாயா பஜார் திரைப்படத்தில் எஸ்.வி.ரங்காராவ் பாடுவதாக அமைந்த ‘கல்யாண சமையல் சாதம் பாடல், இன்று வரை பட்டிதொட்டியெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

வண்ணக்கிளி திரைப்படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடிய ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பாடலும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இரும்புத்திரை படத்தில் ‘கையில வாங்கினேன் பையில போடலே காசு போன இடம் தெரியல’ என்ற பாடல், இன்றும் மாதச்சம்பளம் பெறும் ஊழியர்களின் நிலையை கூறும். ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’ படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே’ என்ற பாடல் கிராமப்புறங்களில் திருமண வீடுகளில் இன்றும் ஒலிக்கிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படத்தில், ‘ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே’ என்ற பாடல், டெண்ட் கொட்டகையில் மணல் திட்டில் உட்கார்ந்திருந்த ரசிகர்களை அப்படியே ஓடத்தில் ஏற்றி வந்தது..

திருச்சி லோகநாதன் மகன்களில் ஒருவரான டி.எல்.மகாராஜன் சிறுவனாக இருந்தபோது, திருவருட் செல்வர் திரைப்படத்தில் பாடிய காதலாகி கசிந்து பாடலை கேட்டு பரவசமடைந்த திருச்சி லோகநாதன், நெகிழ்ச்சியுடன் கண்ணீர் சிந்தியதாக குறிப்பிடுகிறார் அவரது மகன் டி.எல்.மகாராஜன்.

திருவருட் செல்வர் திரைப்படத்தில் ‘ஆலயமணி கதவே தாழ் திறவாய்’ என அண்ணன் மகாராஜன் பாடினால் அவரது சகோதரரும் மற்றொரு பிரபல பின்னணி பாடகருமான தீபன் சக்கரவர்த்தி, நிழல்கள் திரைப்படத்தில் பூங்கதவே தாழ்திறவாய் பாடலை பாடியுள்ளார்.

‘வாராய் நீ வாராய்’ பாடலுக்காக மலைகளும் ‘உலவும் தென்றலுக்காக ஓடங்களும், ஆசையே அலை போல’ பாடலைக் கேட்க, அலைகளும் திருச்சி லோகநாதனின் குரலுக்காக இன்றும் ஏங்கிக் கொண்டிருக்கின்றன. ஆலயத்தின் கதவென்றாலும், பூங்கதவின் தாழ் திறந்தாலும், இனிய பாடல்களை கேட்கும்போது நமது மனங்களின் கதவு திறந்து, கவலைகள் மறக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.