நாட்டின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களின் போர்த்திறனை வெளிப்படுத்தும் வகையில் அரபிக்கடல் பகுதியில் இந்திய கடற்படை சார்பில் போர்ப்பயிற்சி நடைபெற்றது.
நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய கடற்படையின் வலிமையை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக அரபிக்கடல் பகுதியில் போர் பயிற்சி நடைபெற்றது.
ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐஎன்.எஸ்.விக்ராந்த் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இணைந்து இந்த பயிற்சியில் ஈடுபட்டன. மிக்-29 கே உள்ளிட்ட 35 போர் விமானங்கள், அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்களும் இதில் பங்கேற்றன.
பரந்த கடற்பரப்பில் நீடித்த வான் நடவடிக்கைகளை இந்திய கடற்படை உறுதி செய்யும் வகையில் இந்த போர்ப்பயிற்சி அமைந்தது. கடற்பகுதி பாதுகாப்பை மேம்படுத்துவதிலும், இந்தியப்பெருங்கடலை தாண்டியும் இந்தியாவின் வலிமையைக் காட்டுவதிலும் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக போர்ப்பயிற்சி அமைந்தது என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.







