சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறை தலைவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் அனுராதா, தனது துறை மாணவர்களிடம் சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் விதமாக தொலைபேசியில் பேசியது, சமூக வளைதங்களில் வைரலாக பரவியது.
இது தொடர்பான புகார்களை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திலும் அவர் மீது வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அனுராதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கல்லூரி வகுப்பறையில் டிக் டாக் வீடியோ எடுத்து அதில் உதவி பேராசிரியரின் படத்தை மார்ஃபிங் செய்தது குறித்து ஒரு மாணவரிடம் விசாரித்ததாகவும், அந்த தொலைப்பேசி உரையாடலை எடிட் செய்து பிரித்து வெளியிட்டுள்ளதாகவும், சக ஆசிரியரின் தூண்டுதலால் தனக்கு எதிராக உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், எந்த குற்றமும் செய்யாத தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பேராசிரியர் அனுராதா மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டு, மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்த நிலையில், அதுவரை தன்னை கைது செய்யக் கூடாது என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.








