முதுகுளத்தூரில் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலைய போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே வந்த நீர்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், அவரை பின்தொடர்ந்து சென்று பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
போலீசாரின் விசாரணைக்கு பின்னர் வீடு திரும்பிய மணிகண்டன், ரத்த வாந்தி எடுத்து மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மணிகண்டனின் உடல் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிகண்டனின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.








