புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு 17 வயது கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பருவ காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த காயத்திரி (17) என்பவர் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். அவருக்கு காய்ச்சல் இருந்ததால் மூலகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் சிகிச்சை பலனின்றி காயத்ரி இன்று உயிரிழந்தார். அவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பருவ வியாதிகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.







