கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையிலுள்ள 60 கோடி வரிபாக்கியினை விரைந்து வசூல் செய்யவும், மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி புகார் சேவை எண்ணை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடலுார் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று திடீரென மாநகராட்சிக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சியிலுள்ள 45 வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்களிடம் விசாரித்தார்.
பின்னர் அவர் கடலுார் மாநகராட்சி பகுதியில் பேனர் வைப்பதற்கு அனுமதி கிடையாது, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மட்டும் பேனர் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும், வரி வசூல் செய்வது, வளர்ச்சி பணிகள் குறித்து துாய்மை பணியாளர்களுக்கு சுற்றறிக்கை கொடுக்கப்பட்டு பணி சரியாக மேற்கொள்ள வேண்டும் எனவும், கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரிபாக்கி 60 கோடி நிலுவையுள்ளதை விரைவாக வசூல் செய்ய வேண்டும் எனவும், வரி பாக்கி வைத்துள்ள 50 நபர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் மாநகராட்சியில் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்ணை ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்தக்கூட்டத்தில் மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர், துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அனகா காளமேகன்






