ரமலான் பண்டிகைக்காக பணம் வசூலிக்கப்பட்டு, அதை சட்டவிரோத செயல்களுக்கு
பயன்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ., மாநில அரசு ஆகியவை பதிலளிக்க
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஜகுஃபர் சாதிக் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ரமலான்
பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்காக உதவுவது உள்ளிட்ட நலப்பணிகளை மேற்கொள்வதாகவும் கூறி சென்னையில் பணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் பண்டிகையின்போது அதிகளவில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், ரமலான் முடிந்த நிலையிலும் பணம் வசூலிக்கப்பட்டு சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த நாகூர் மீரான் மற்றும் மண்ணடி அப்துல்லா
ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை கோரி தமிழக டிஜிபி, ஆவடி காவல் ஆணையர்
ஆகியோரிடம் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செய்லகளில் சிறார்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவதாகவும்,
மேலும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும்
தெரிவித்துள்ளார். இதனை தடுக்கக்கோரி அளிக்கப்பட்ட மனு மீது தமிழக டிஜிபி,
ஆவடி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டுமென மனுவில்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய
அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் மனுதாரருக்கும் எதிர்
மனுதாரர்களுக்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்னையை நீதிமன்றத்தில் வழக்காக
தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இது தனிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும்,
இளைஞர்கள் மற்றும் சமூகத்தை சீரழிக்கும் நிலை தொடர்பான தீவிரமான விஷயம்
என்பதால் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும், மனுதாரர் கூறுவதுபோல நடந்தால்
தடுக்கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தினர்.
பின்னர் வழக்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை, மாநில அரசு ஆகியவை 2
வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.








